சென்னை: தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7,000 பேர் பங்கேற்றதாக திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, திமுக நேற்று வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கேட்பு மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட நாயகர் அரசின் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரையும் அரவணைப்பது போலவே, கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கனிவுடனும் கண்டிப்புடனும் வழி நடத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் அவர் கொண்டுள்ள நேசம் நிகரில்லாதது.
தொண்டர்களிடம் அவர் காட்டும் கனிவு, தொண்டர்களுக்கு அவர் செலுத்தும் மரியாதை இவைகளெல்லாம் ஒவ்வொருவரையும் நினைந்து நினைந்து மகிழ வைக்கின்றன. தலைவரை காண வேண்டும், அவருடன் பேச வேண்டும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நிர்வாகிகளும் தொண்டர்களும் கொண்டுள்ள ஆர்வத்தை வேறு எந்த கட்சியிலும் காண முடியாது. சில நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு தலைமைக் கழகத்தில் நேரில் வந்து கேட்பு மனு அளிக்க வேண்டும் என தலைமைக் கழகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதற்காகப் போட்டியிட கேட்பு மனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக சட்டப்பேரவை தொகுதி வாரியாக நேர்காணல் நடத்தி அவர்களில் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட வேண்டும். எனவே திராவிட நாயகர் விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேதியை மாவட்டம் வாரியாக தொகுதி வாரியாக அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பி கேட்பு மனு அளித்த திமுக தோழர்கள் தங்களுக்கு உரிய நாளில், காலையிலோ மாலையிலோ உரிய நேரத்தில் அறிவாலயம் வந்து கூடினர்.
திமுக தலைவர் திராவிட நாயகர் மார்ச் 17 செவ்வாய் முதல் மார்ச் 22 ஞாயிறு வரை ஐந்து நாள்கள் சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேர்காணல் நடத்தினார். 21ம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் காரணமாக அன்றைய நேர்காணல் 23ம் தேதி (திங்கட்கிழமைக்கு) மாற்றப்பட்டு நடைபெற்றது. நேர்காணலில் முதல் நாளான 17ம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கும், 18ம் தேதி முதல் மற்ற நாட்களில் தமிழ்நாட்டிற்குமான கேட்பு மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கே திராவிட நாயகர் அறிவாலயம் வருகை தந்தார்.
காலை 9.30 மணி தொடங்கி பகல் 2 மணி வரையிலும், பிற்பகலில் 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 10 மணி நேரம் போட்டியிட விருப்ப மனு அளித்த ஒவ்வொருவரிடமும் நேர்காணலை நடத்தினார். திமுக தலைவர் திராவிட நாயகர் போட்டியிட விரும்பி கேட்பு மனு அளித்தவர்களின் பட்டியல் இருந்தது. அந்தப் பட்டியல்படி பெயர்சொல்லி ஒவ்வொருவராக அழைத்தார். அதன்படி நேர்காணலில் பங்கேற்றவர் வந்தவுடன் அவரை இருக்கையில் அமரச் செய்தார். அவரிடம் உங்கள் பெயர் என்ன, உங்கள் ஊர் எது, உங்கள் தொகுதி எது, உங்கள் மாவட்டம் எது மாவட்டச் செயலாளர் யார் என்ற விவரங்களையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக கேட்டார்.
அதன் பின்னர், திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பற்றிக் கேட்டார். இந்த திட்டங்கள் மீது உங்கள் பகுதி மக்கள் கொண்டுள்ள எண்ணம் உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றிச் சொல்லுங்கள் என கேட்டு மக்களை எப்படி அணுகுவீர்கள், எப்படி மக்களிடம் வாக்குகள் கேட்பீர்கள், உங்களால் எத்தனை வாக்குகள் பெற முடியும், உங்கள் தொகுதியில் எதிர்க்கட்சி சார்பில் யார் நின்றாலும் தயக்கமின்றி, அஞ்சாமல் அவரை எதிர்த்து நின்று வெற்றிபெற என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வேட்பாளர் ஆகும் தகுதியை ஆய்வு செய்தார்.
அப்படி ஆய்வு செய்யும்போது அவர்கள் அனைவரும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் சிறப்பான முறையில் பயன் அளிக்கின்றன. அவற்றின் மூலம் மக்கள் இந்த அரசின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளார்கள் என்பது போன்ற செய்திகளை கூறினார்கள். அவற்றைக் கேட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இப்படி, ஐந்து நாள்களிலும் தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் புதுவை மாநிலத்தின் 30 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பி கேட்பு மனு அளித்திருந்த நிர்வாகிகளிடம் கேள்விகளை தொடுத்து தொகுதி நிலவரங்களை தெளிவாக அறிந்து கொண்டார்.
நேர்காணலில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 150 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6,850 பேரும் என மொத்தம் 7,000 பேர் பங்கேற்றார்கள். இந்த நேர்காணலில் கேட்பு மனு அளித்தவர்களில் பெண்களும் இளைஞர்களும் அதிகமாக இருந்ததும், அவர்கள் ஆர்வத்துடன் நேர்காணலில் பங்கேற்றதும் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேர்காணல் பணியிலும் திராவிட நாயகரின் முத்திரை அனைவராலும் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
