நல்லம்பள்ளி, மார்ச் 24: இண்டூர் அருகே சிப்ஸ் குடோனில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி அணைத்தனர். தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த பென்னாகரம் பைபாஸ் சாலையோரம், தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் தங்கவும், சிப்ஸ்களை பேக்கிங் செய்வதற்கும், பிளாஸ்டிக் பைகளையும் அடுக்கி வைப்பதற்கு கடையையொட்டி குடோன் அமைத்திருந்தனர். சிப்ஸ் கடையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது குடோனில் புகை வருவதை பார்த்துள்ளனர். உடனடியாக குடோனுக்கு சென்று பார்த்தபோது தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியது. அதன்பிறகு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஒரு செல்போன், துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கேரி பைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சிப்ஸ் கடையில் தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
