சிவகாசி, மார்ச் 28: சிவகாசியில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர். சிவகாசி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. விபத்துகளை தடுக்கும் வகையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள டி.எஸ்.பி.அணில்குமார் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து சிவகாசியில் விளாம்பட்டி ரோடு, சாத்தூர் ரோடு, திருத்தங்கல், சாட்சியாபுரம், சிவகாசி பஸ் ஸ்டாண்ட், வெம்பக்கோட்டை ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் கண்கூசும் விளக்குகள் பொருத்தப்பட்டு வந்த சொகுசு கார்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
