×

ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொது பார்வையாளர் ஆய்வு

சென்னை, மார்ச் 24: ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் வீரேந்திர குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் ஆகியவை, ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல் பொது பார்வையாளர் வீரேந்திர குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டுப்பாட்டு மையத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ பதிவு கண்காணிப்பு ஆகிய குழுக்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஜி.பி.எஸ் கருவி மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். மேலும், தொலைபேசியின் வாயிலாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தேர்தல் தொடர்பான புகார்கள், சி.விஜில் செயலி மூலம் பதியப்படும் புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதை கேட்டறிந்து, அதன் தொடர்பாக பராமரிக்கப்படும் பதிவேடு விவரங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஊடகக் கண்காணிப்பு மையத்தில் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான செய்திகள், விளம்பரங்கள், கட்டண செய்திகள், தேர்தல் விதிமீறல்கள் உள்ளிட்ட பணிகளை கண்காணித்து பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தேர்தல் தொடர்பான செய்திகளை தீவிரமாக கண்காணித்து அதன் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு அலுவலருக்கு பொது பார்வையாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Tags : RIBBON HOUSE ,Chennai ,Veendra Kumar ,General ,Sepakam-Thiruvallikeni Assembly Constituency ,Election General Observer ,Election Control Centre ,Media Monitoring Centre ,Tamil Nadu Assembly Election ,
× RELATED பெண்ணிடம் அத்துமீறல் ஜோதிடர் கைது