×

தாய் கிழவி

நன்றி குங்குமம் தோழி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படமே ‘தாய் கிழவி.’

அதிகாரமும் அன்பும் சரிசமமாகப் பகிரப்படுகிற வீட்டில் இருக்கின்ற அந்த புதிய சமூகத்தின் முகம் எப்படி இருக்கும்? இந்த ஒன்லைன்தான் ‘தாய் கிழவி’ படம். எந்தவித படிப்பறிவும் இல்லாத, ஆனால், மிகப்பெரிய ஆளுமையோடும் அதிகாரத்தோடும் வாழ்ந்த நம் பழைய தலைமுறை தாய் கிழவிகளின் வாழ்வியலை, பெண்களிடமும்… பெண்களைப் பற்றி ஆண்களிடமும் பேசுகின்ற நகைச்சுவை படமாக வந்திருக்கிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்து வாழ்வியலின் யதார்த்தத்தை எந்தவிதமான செயற்கைத்தனமும் இல்லாமல் மிக எளிதாக, ‘களவாணி’ பட பாணியில் நகைச்சுவையுடன் இயக்குநர் கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. சிரிப்பலையில் தியேட்டரை அதிர வைக்கும் காட்சிகள் பல இருந்தாலும், நகைச்சுவை மூலமாகவே ஆழமான விஷயங்களையும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்கள். படத்தை முழுமையாக ரசிச்சு சிரிக்கும் அதே சமயம், ஆழமாக சிந்திக்கவும் வைக்கிறது.

ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே போறதோ, உடை உடுத்துறதோ சுதந்திரமில்லை. தன் கையால் உழைத்து, பணம் சேர்த்து பொருளாதார ரீதியா தற்சார்புடன் வாழ்வதே பெண்ணுக்கான சுதந்திரம். இதுதான் அவளுக்கு நிரந்தர மரியாதையை பெற்றுத்தரும் என்பதை ஆணித்தரமாகவே, பல்வேறு காட்சிகள் வழியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை வழியாக பெண்களின் சுதந்திரம், தற்சார்பு, பொருளாதாரம், கிராமத்து வாழ்வியல் என, தான் ஏற்று நடித்த பவுனுதாய் கேரக்டரில், நடிகை ராதிகா தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

படம் ஆரம்பிக்கும் போது முதல் 15 நிமிஷமும், படம் முடியும் போது கடைசி 15 நிமிஷம் என ராதிகாவின் திரை நேரம் படத்தில் குறைவுதான் என்றாலும், படம் முழுக்க ராதிகாவின் ஸ்கிரீன் பிரசென்ஸ் மிரட்டல் ரகமாகவே வெளிப்பட்டிருக்கிறது. படத்தின் மொத்த மைய கருத்தையும், ராதிகாவின் உடல் மொழி தாங்கி நிற்கிறது என்றே சொல்லலாம்.திரை உலகம் பெண்ணின் மீது பூசியிருக்கும் கவர்ச்சியின் மிச்ச சொச்சம் என எதுவும் இல்லாத உருவமாய், ஒரு கிராமத்து அடாவடி தாய் கிழவியாய், காது வளர்த்த நிலையில், தண்டட்டி, பாம்படம், முடிச்சு, குறுக்கு தட்டு, மொன்னப்ப தட்டு போன்ற காதணி அலங்காரங்களுடன், மூக்கின் இரண்டு பக்கத்திலும் அகலமாய் மூக்குத்திகள் அணிந்து, அள்ளி முடிந்த கூந்தல், முன் கொசுவம் வைத்து சுற்றிய புடவை, தொளதொள ரவிக்கை, தெனாவட்டு பேச்சு, மிடுக்கான நடையென ராதிகாவின் நடிப்பு கதையோடு கச்சிதமாகப் பொருந்துகிறது.

ஆண்களைப் பார்த்து பெண்கள் பயந்து ஒதுங்கி நிற்கத் தேவையில்லை. பம்மி ஒடுங்கவும் தேவையில்லை என்பதை, வெறும் வார்த்தைகளில் சொல்லாமல், தன் செய்கையின் வழியாக படம் முழுக்க நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார் பவுனுத்தாயாக அதிரடி கிளப்பியிருக்கும் நடிகை ராதிகா. ராதிகாவின் கணவர் இறந்த பிறகு, அவரின் மூன்று மகன்களும், அவரது சொத்தை பிரிக்க வருவதும், அப்போது ராதிகா, “உங்க அப்பன் சம்பாதிச்சது அவனோட குடிக்கே சரியா போச்சு.

இது நான் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு கட்டுன பவுனுதாய் இல்லம். நானே கழுத்து வலிக்க உழைச்சு சம்பாதிச்சு சேர்த்த சொத்து. எனக்கு பிறகு இதெல்லாம் யாருக்கு போகணும்னு நான்தான் முடிவு பண்ணு வேன்” எனச் சொல்லும் போது, அந்த இடத்தில் நிற்பது வெறும் அம்மா இல்ல… தன் உழைப்பை நம்பி நிற்கும் அதிகாரம் என, உடல் மொழி வழியாகவே வசனங்களை வெளிப்படுத்தி, தன் கம்பீரத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.

தாய் கிழவியின் கம்பீரம் அவரது உழைப்பின் வழியாக சுய மரியாதை சார்ந்து நிற்பதும், அவரின் மருமகள்கள் செய்கிற போராட்டம், உழைக்காமல் கிடைக்கின்ற சொத்துக்காக, சுயநலத்தை சார்ந்து நிற்பதுமாக படம் முழுக்க வெளிப்படுகிறது.‘நீ பொழைக்கிறதுக்கு உனக்கு இருக்கிற சுதந்திரம்தான் உண்மையான சுதந்திரம். 60 வயசுல எனக்கு கிடைச்ச அந்த சுதந்திரம் 30 வயசுல என் மகளுக்கு கிடைச்சது. நாளைக்கு அவ பிள்ளைக்கு பிறக்கும்போதே கிடைச்சுறும்’ என்கிற வசனமும், தான் படிக்காவிட்டாலும் தன் மகள் ரெண்டு எழுத்தாவது கத்துக்கிறட்டும்னு ஊருக்கே தெரியாம ரகசியமா பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப் போன பழைய தலைமுறை தாய் கிழவிகளின் கல்வி தாகமும் படத்தில் மிக அழகாய் வெளிப்பட்டு இருக்கு.

தாய் கிழவி தியேட்டருக்கு போய் சிரிச்சிட்டு வருகிற வெறும் சாதாரண பொழுது போக்கு திரைப்படம் மட்டுமே கிடையாது. நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை, குறிப்பாக எந்தவித படிப்பறிவும் இல்லாத பழைய தலைமுறை பெண்கள், தங்களின் பெண் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்கணும், அவர்கள் யாரையும் சார்ந்து நிற்கக்கூடாதுன்னு துடிச்ச அவர்களின் கல்வி தாகத்தை நினைவுபடுத்துகிற சிறப்பான கிராமத்துக் காவியம்.

உண்மையான சுதந்திரம் அப்படிங்கறது வெளியில சுத்துறது மட்டுமில்ல… பெண் தன் காலில் நிக்கிற… பொருளாதார தற்சார்போடு வாழுற… பொழைக்கிறதுக்கான அந்த உரிமையே பொம்பள சுதந்திரம் என, பெண்களை உழைத்துப் பிழைக்கச் சொல்லுகிற சிறந்த பாடமாக ‘தாய் கிழவி’ படம் வந்திருக்கிறது.

தொகுப்பு: குங்குமம் தோழி டீம்

Tags : Sivakumar Murukesan ,Sivakarthikeyan ,Radhika ,
× RELATED நடனமே என் முழுநேர பணி!