×

நடனமே என் முழுநேர பணி!

நன்றி குங்குமம் தோழி

‘‘தொன்மையான பாரம்பரிய நடனத்தை அடுத்த தலைமுறைக்கு மிக எளிமையான வகையில் சொல்லித்தர வேண்டும். இன்றைய தலைமுறை குழந்தைகளும் ஆர்வமுடன் நடனக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை’’ என்கிறார் பரதக் கலைஞரான பிரபாவதி.

‘‘நடனத்திற்கு வயதில்லை. எந்த வயதினரும் நடனம் கற்றுக் கொள்ளலாம். இல்லத்தரசிகள் பலரும் கூட ஆர்வமாக பரதம் கற்றுக்கொள்ள வருகின்றனர். பரதம் உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்குமான ஆரோக்கியமானதொரு நலன் பயக்கும் பயிற்சி.எனக்கு சிறுவயதில் இருந்தே கலைகள் மேல் ஆர்வம் அதிகம். அதன் காரணத்தினாலே நான் என்னுடைய பத்து வயதில் இருந்தே பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

அப்படி ஆரம்பித்த அந்த கலைப் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பொறியியலில் முதுகலை முடித்திருந்தாலும் பரதத்தையே என்னுடைய முழு நேர பணியாக மாற்றிக் கொண்டேன். நான் பயின்றதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். என் மாணவ, மாணவிகளுக்கான குழு நடனங்களை அதிகளவில் நடத்தி அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தேன்’’ என்றவர், தன் நாட்டிய பயணம் குறித்து பகிர்ந்தார்.

‘‘முதன் முதலில் குரு எழிலரசி மதனகோபாலிடம்தான் தஞ்சை பாணி நடனத்தினை கற்றுக்கொண்டேன். 2011ல் அரங்கேற்றம் நடைபெற்றது. தற்போது குரு ஹிமஜாவிடம் தமிழிசை கல்லூரியில் ஸ்பெஷல் கோர்ஸ் நட்டுவாங்கம் மற்றும் பரதநாட்டிய பயிற்சியினை எடுத்து வருகிறேன். இது தண்டாயுதபாணி நடனக்கலை. நடனத்திற்கான தியரியினை குரு சுஜாதா மோகனிடம் பயின்றேன். பின்னர் ஆன்லைனில் அபிநய தர்ப்பணம் மற்றும் நாட்டிய சாஸ்திரம் கற்றுக் கொண்டேன்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பைன் ஆர்ட்ஸ் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அதன் பிறகு நடனக் கலைஞர் என்ற அடையாளம் எனக்கு கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பாக கிடைத்தது. பொறியியல் படித்திருந்தாலும், நடனம் மேல் இருந்த மோகத்தினால் அதையே என்னுடைய வாழ்க்கைப் பயணமாக நான் தேர்வு செய்தேன். தற்போது காஞ்சியில் ஸ்ரீமகாலஷ்மி நிருத்தியாலயா என்ற நடனப் பள்ளியை ஆரம்பித்து நடனம் பயிற்றுவித்து வருகிறேன்.

ஆரம்பகட்டத்தில் வீட்டிலேயே நடனப் பயிற்சி அளித்து வந்தேன். மேலும், பள்ளிகளில் பகுதி நேர நாட்டிய ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்தேன். அது எனக்கு நல்லதொரு அனுபவங்களை தந்தது. அதன் பிறகுதான் ஒரு நடனப் பள்ளியை துவங்கலாம் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. தற்போது 100க்கும் மேற்பட்ட பிள்ளைக்கு பரதப் பயிற்சி கொடுத்திருக்கிறேன்.

மேலும், என்னுடைய நடனப் பள்ளியின் மற்றொரு கிளையும் திறந்திருக்கிறேன். இரண்டுமே வெற்றிகரமாக இயங்கி வருகிறது. எனது அம்மாவிற்கு நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதே விருப்பம் எனக்கும் இருந்ததால், எனக்கு பயிற்சி அளித்தார். இப்போது அதுவே என்னுடைய நிரந்தர பணியாக மாறிவிட்டது’’ என்றவர், தன் மாணவர்களுடன் இணைந்து நிகழ்த்திய நடன நிகழ்ச்சிகள் குறித்து பகிர்ந்தார்.

‘‘2022ல் 60 மாணவர்களுடன் சேர்ந்து 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை மூன்று மணி நேரம் லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் உலக சாதனை செய்தது என்னால் மறக்கவே முடியாது. மீனாட்சி திருக்கல்யாணம், ஆண்டாள் கல்யாணம், தசாவதாரம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களை நாட்டிய நாடகமாக நிகழ்த்தி இருக்கிறோம். அரசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், கம்பன் கழகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் பிள்ளைகள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறார்கள். முக்கியமாக தமிழிசை கல்லூரியுடன் இணைந்து மாணவச் செல்வங்களை கிரேட் எக்ஸாம் எழுத தயார் படுத்தி வருகிறோம்.

பொறியியல் துறையில் நான் வேலையில் இல்லை என்ற கவலை எனக்கு இல்லை. காரணம், பரதக்கலை எனக்கு மனநிறைவையும் நல்ல வளர்ச்சியையும் அளித்துள்ளது. என்னுடைய நடனப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை கலைவளர்மணி விருது வழங்கி கௌரவித்தது. நடனச்சுடர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறேன். உலக அமைதி மற்றும் மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை நாட்டிய கலா ரத்னா என்று விருது வழங்கி கௌரவித்துள்ளது. இது போன்ற பல்வேறு பாராட்டுகள் என்னை தொடர்ந்து இத்துறையில் மேலும் கற்றுக்கொள்ளவும் எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலை அளித்துள்ளது.

பெண்கள் கல்வியுடன் ஏதேனும் ஒரு சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தினை ஏற்படுத்தும். நடனம் எங்களுக்கு பல்வேறு வாழ்வியல் பாடங்களையும் கற்றுத் தந்துள்ளது. அதேபோல் உங்களின் லட்சியம் என்ன என்று கண்டறிந்து அதை நோக்கி பயணியுங்கள். அது உங்களுக்கு வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும்’’ என்கிறார் நடனக் கலைஞர் பிரபாவதி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

Tags : Kungumam Dozhi ,Prabhavathi ,
× RELATED தாய் கிழவி