×

கடின உழைப்பு இருந்தால் இலக்கை அடையலாம்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய குழந்தைகள் கல்வியோடு சிறுவயதிலேயே பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் ஜொலித்து வருகிறார்கள். போட்டிகள் நிறைந்த உலகில் பல கலைகளை கற்றுக்கொள்வது எதிர்காலத்தில் வளமான வாழ்வினை உருவாக்கி தரும் என்ற நம்பிக்கையோடு முயற்சித்து சிறுவயதிலேயே பல்திறன் படைத்தவராக இருக்கிறார் வட சென்னை பகுதியை சேர்ந்த சிறுமி அனாமிகா. ஏழாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது நிரம்பிய அனாமிகா கராத்தே மற்றும் சிலம்பத்தில் தனி முத்திரை பதித்து வருகிறார்.

‘‘நான் சின்ன வயசில் ரொம்பவே துறுதுறுன்னு இருப்பேன். அதனால் அம்மா என்னை கராத்தேயில் சேர்த்துவிட்டார். தற்போது நான் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ளேன். என்னுடைய குரு ரேவதி மாஸ்டர். அவர்களிடம்தான் எட்டு வருடமாக கராத்தே பயின்று வருகிறேன். கராத்தேவினை சிறுவயதில் இருந்தே பயின்று வந்ததால், என்னுடைய ஐந்து வயதில் இருந்தே அதில் பல விருதுகளை வாங்கியிருக்கிறேன்.

மேலும், மாவட்ட அளவில் தங்கப் பதக்கமும், அதே கராத்தே வில் மற்றொரு மாநில அளவு போட்டியில் இரண்டாம் இடமும் வென்றிருக்கிறேன். கராத்தேவை தொடர்ந்து எனக்கு சிலம்பத்திலும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் கடந்த இரண்டு வருடமாக சிலம்பமும் கற்று வருகிறேன். இதிலும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் வென்றிருக்கிறேன். தற்போது எட்டு மாதங்களாக பேட்மிண்டன் பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றவர் தான் படைத்திருக்கும் சாதனை குறித்தும் பகிர்ந்தார்.

‘‘எனக்கு 12 வயது இருக்கும் போது ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் கண்களை கட்டிக் கொண்டு நாடுகளின் கொடிகளை இணைத்து உலக சாதனை படைத்தேன். பிரம்மீடு மற்றும் க்யூப்ஸ் விளையாட்டிலும் இரண்டு உலக சாதனை படைத்திருக்கிறேன். கராத்தே, சிலம்பம் தவிர ஹாக்கி, ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் விளையாட்டுகளிலும் பயிற்சி மேற்கொண்டு விளையாடி வருகிறேன். இந்த விளையாட்டுகளில் பள்ளி அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றிருக்கிறேன். இப்போது என்னுடைய இலக்கு புதிய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

நான் தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை மேற்கொண்டாலும், எனக்கு ஊக்கமளித்து மனப்பயிற்சிகளை சொல்லிக்கொடுத்தவர் என் பயிற்சியாளர் அகிலா அவர்கள்தான். அவர் அளித்த பயிற்சியால் என்னுடைய கவனம் சிதறாமல் போட்டியில் முழுத்திறனை வெளிப்படுத்த முடிந்தது. மேலும், என் நினைவாற்றலும் மேம்பட்டது. அதனால்தான் என்னால் ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் திறமையாக விளையாட முடிகிறது. என்னுடைய இந்த முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பவர் என் தாயார்தான்.

என்னுடைய நான்கு வயதில் இருந்தே எனக்குப் பிடித்ததை செய்ய எனக்கு முழு ஒத்துழைப்பாக இருந்து வருகிறார். அம்மா தமிழக காவல்துறையில் பணியாற்றி வருவதால், எனக்கு முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகள் காரணமாக சிறந்த வாழ்வியல் முறைகளை சொல்லித் தந்துள்ளார். தந்தை எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்கிறார். நடுத்தர குடும்பம் என்றாலும், தீவிர பயிற்சியாலும் கடின உழைப்பில்தான் நான் இந்த உயரத்தை அடைந்திருக்கிறேன். என்னைப்போல் என் தங்கையும் கராத்தே கற்று வருகிறார்.

அவரும் மாநில கராத்தே போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். விளையாட்டு துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எதிர்காலத்தில் கராத்தேயில் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும்’’ என்றார் அனாமிகா.

தொகுப்பு:  தனுஜா ஜெயராமன்

Tags : Kunkumam ,
× RELATED ம்யூல் அக்கவுன்ட் ஸ்கேம்!