×

குழந்தைகளுக்கு ‘லைஃப் வேல்யூஸ்’ அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

இந்தக் கால குழந்தைகள் அதிநவீன தொழில்நுட்பம் மீது ஆர்வம் கொண்டவர்களாக மட்டுமில்லாமல் அதற்கு அடிமையாகியும் வருகிறார்கள். எலக்ட்ரானிக் கேஜட்களை தனக்கான உலகமாக சுறுக்கி உறவுகளிலிருந்து விலகி வாழ்கின்றனர். அவர்களுக்கு உறவுகளின் அருமையும் வாழ்வியல் உண்மைகளும் புரிவதில்லை. அன்பு, நேர்மை, நன்றி உணர்வு, மனித நேயம், தனிமனித ஒழுக்கம், சமுதாய உணர்வு போன்றவற்றை உணராமல், தங்கள் உடல் மற்றும் மனநலம் இரண்டையும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறார்கள். மொபைலில் கதை கேட்பதில் உள்ள ஆர்வம் புத்தகத்தில் கதையினை படிப்பதில் இல்லை.

‘‘15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களுக்கு பிடித்தமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே லைஃப் வேல்யூசை சொல்லித் தர முடியும். அது இந்த காலக்கட்டத்தில் கட்டாய தேவையாக உள்ளது. 15 வயது வரை உள்ள குழந்தைகளே எங்கள் டார்கெட். அவர்களுக்கு மொழி, கலாச்சாரம், நற்பண்புகளைப் போதிக்கும் விதத்திலேயே எங்கள் தயாரிப்புகள் இருக்கும்’’ என்கின்றனர் ‘இங்க்மியூ’ நிறுவனத்தினரான ஹரிதா, சதீஷ் குப்தா தம்பதியினர். இவர்கள் கல்வி சார்ந்த புதுப்புது உபகரணங்களை அறிமுகப்படுத்தி விற்பனையில் அசத்தி வருகின்றனர். அதில் இவர்களின் லேட்டஸ்ட் தயாரிப்பான திருக்குறள் பாக்ஸ் குழந்தைகளின் ஃபேவரைட்டாக மாறிவருகிறது.

‘‘நான் பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாமே சென்னையில்தான். கல்லூரிப் படிப்பு முடிச்சதும், கல்யாணம். வேலைக்கு போன அனுபவம் எல்லாம் இல்லை. என் மாமனார், ‘அபிராமி ஆடியோ’ என்ற பெயரில் தனியார் ரிக்கார்டிங் நிறுவனம் ஒன்றை 1994 முதல் நடத்தி வந்தார். அதில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் காப்பி ரைட்டுடன் பக்திப் பாடல்களை மட்டும் வெளியிட்டு வந்தார். திருமணத்திற்குப் பிறகு மாமனாருடன் நானும் என் கணவரும் இணைந்து குடும்பமாகவே கம்பெனியை கவனித்து வந்தோம்.

எங்களின் மகன் குழந்தையாக இருந்த போது நிறைய ரைம்ஸ் கேசட்டுகளை வாங்கி போட்டுக் காட்டுவோம். அப்போது அவனுக்காக ஸ்பெஷலாக நாமே பாடல்களை வெளியிடலாம் என்று என் கணவர் சொன்னார். அவருக்கு கற்பனைத் திறன் அதிகம். ஏதாவது புதியதாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். அவர் அப்படி சொன்னதும், நாங்க இருவரும் சேர்ந்து உருவாக்கியதுதான் ‘மேஜிக் பாக்ஸ் அனிமேஷன்ஸ் பிரைவெட் லிமிடெட்’ நிறுவனம்’’ என்றவர் தங்களின் பிசினஸ் பயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

‘‘13 வருடங்களுக்கு முன் எங்க குடும்ப ரிக்கார்டிங் நிறுவனத்துடன் இணைந்து அனிமேஷன் அறிவையும் பயன்படுத்தி உருவானதுதான் ‘மேஜிக் பாக்ஸ்’. இதனைத் தொடர்ந்து தமிழில் ‘செல்லமே செல்லம்’ மற்றும் பல யுடியூப் சேனல்களும் இயக்கி வருகிறோம். அதில் சுட்டிக் குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள், இலக்கண பாட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என பாடல்கள் வழியாக இருநூறுக்கும் மேற்பட்ட அனிமேஷன்களை உருவாக்கினோம். அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

எங்கள் குழந்தை பாடல்கள் ஒலிக்காத வீடுகளே கிடையாது. 4000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல்கள், கதைகள் அனிமேஷனுடன் இருக்கும். இதுவரை 1 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அதில் தமிழில் மட்டும் 40 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். யுடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்பாட்டிபை எனத் தொடங்கி உலகம் முழுவதும் 192 தளங்களில் எங்கள் பாடல்களை சேர்த்துள்ளோம். எங்கள் மகனுக்காக நாங்கள் தொடங்கிய பயணம் இன்று உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்காக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது நிஜமாகவே சாதித்ததாக உணர்கிறோம்’’ என்று பெருமை கொள்கிறார் ஹரிதா.

‘‘நாங்க பல பாடல்களை வௌியிட்டு இருந்தாலும், எங்களின் இத்தனை வருட உழைப்புதான் தற்போது வௌியாகி இருக்கும் குறள் பாக்ஸ். 1330 திருக்குறளுக்கும் இசை அமைத்து பொருளுரையுடன் எளிமையான பாடல்களாக மாற்றி முதன்முதலாக கேசட்டில் வெளியிட்டது நாங்கள் தான் என்ற பெருமை எங்களுக்குண்டு. கேசட்டில் இருந்து சி.டி, டிவிடி, எம்பி3 என வளர்ந்து தற்போது சிப்புடன் குறள் பாக்ஸை வெளியிட்டுள்ளோம். 1330 திருக்குறளுக்கும் ரமணி இசை அமைத்துள்ளார். தமிழ் பிரியன் உரை எழுதியுள்ளார். 30க்கும் மேற்பட்ட பிரபலமான ஆண், பெண் பாடகர்கள் திருக்குறளைப் பாடலாக பாடியுள்ளனர்.

தேவராஜன் மற்றும் சைந்தவி உரை பேசியிருக்கிறார்கள்’’ என்றவர் ‘குறள் பாக்ஸ்’ இயக்கம் பற்றிக் கூறத் தொடங்கினார்.‘‘இது மினி டிரான்சிஸ்டர் வடிவில் எண்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். விரும்பும் திருக்குறளின் எண்ணினை அழுத்தினால் போதும். திருக்குறள் பாடல் வடிவில் தொடர்ந்து இரண்டு முறை வரும். பின் அதன் பொருள் வரும். இது ரீசார்ஜபிள் பேட்டரியினால் இயங்குகிறது. 1 மாத ரீப்ளேஸ்மண்ட் கேரண்டி தருகிறோம். இந்தப் பாடல்களை எங்களின் யுடியூப் சேனலிலும் அப்லோட் செய்துள்ளோம்.

இதனைத் ெதாடர்ந்து ‘ரீயூசபிள் வால் ஸ்டிக்கர்’ மக்களின் வரவேற்பைப் பெற்ற எங்களின் மற்றொரு தயாரிப்பு. 18×18 அளவுகளில் 7 அடிகளாக வால் ஸ்டிக்கர்ஸ் வழங்குகிறோம். இதனை சுவற்றில் ஒட்டிக் கொள்ளலாம். அதில் விலங்குகள், பறவைகள், தலைவர்கள் மற்றும் சில பொருட்களின் படங்கள் இருக்கும். பிள்ளைகள் கிரையான்ஸ், ஸ்கெட்சுகள் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம். ஈரத்துணியால் துடைத்து எத்தனை முறை வேண்டுமானாலும் மறுபடியும் பயன்படுத்தலாம். நாங்கள் இதற்கான ஆப் தந்துவிடுவோம். அதில் இந்தப் படங்களை ஸ்கேன் செய்தால் போதும். வண்ணத்துடன் அந்தப் படம் தொடர்பான செய்திகளும் கதைகளும் பாடல்களும் வரும்.

பொதுவாக குழந்தைகள் வீட்டின் சுவற்றில் கிறுக்குவது வழக்கம். நாம் அதை கண்டிப்பதால், அவர்களின் கற்பனைத் திறன் தடைபடும். இதை மனதில் வைத்து நாங்கள் இந்த ஸ்டிக்கரை உருவாக்கி இருக்கிறோம். அடுத்து ‘தமிழ் கற்போம்’, தமிழ் எழுத்துகளும், சொற்களும், படங்களும், பாடல்களும் வரும். குழந் தைகளுக்கு தமிழ்மொழியை எளிமையாக கற்பிக்கலாம். கோள்களைப் பற்றி தெரிந்து கொள்ள சோலார் சிஸ்டம் பேக் ஆப் வடிவில் தருவதால், ஒரு தடவை இன்ஸ்டால் செய்தால் போதும். மறுபடியும் பயன்படுத்த இன்டர்நெட் தேவையில்லை. குழந்தைகளின் கற்பனைத் திறனும் வலுப்பெறும்’’ என்றவர் தாங்கள் இதுவரை 70க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வெளியிட்டுள்ளதாக கூறுகிறார். இவரைத் தொடர்ந்தார் கணவர் சதீஷ் குப்தா…

‘‘நாங்க ஆரம்பத்தில் அப்பாவின் ஆடியோ கம்பெனியை நிர்வகித்தாலும் எனது அனிமேஷனின் ஆர்வம்தான் ஆடியோவுடன் அனிமேஷனை இணைக்க வைத்தது. குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் ‘லைஃப் வேல்யூசை’ சொல்லித் தர முடியுமோ அந்த அடிப்படையில் தான் நாங்க ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தயாரிக்கிறோம். தற்போது கடவுள் குறித்தான பாடல்களை அனிமேஷன் முறையில் கதை வடிவில் வீடியோக்களாக வெளியிட்டு இருக்கிறோம்.

அனைத்து மதமும் சம்மதம் என்பதால், அனைத்து கடவுள்களின் பாடல்கள், கதைகள், போதனைகள், கலாச்சாரங்களை எல்லாம் குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு எங்கு எதை பார்த்தாலும் அதில் கல்வி இருக்க வேண்டும். அதையும் எளிமையாக கொடுக்க வேண்டும் என்பதை நோக்கியே எங்கள் தேடலும் பயணமும் உழைப்பும் இருக்கும்’’ என்கின்றனர் லட்சிய தம்பதிகளான ஹரிதா, சதீஷ் குப்தா தம்பதியினர்.

செய்தி: கலைச்செல்வி

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED தாய் கிழவி