சென்னை, மார்ச் 21: சென்னை அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் கொண்டு வந்த ரூ.65 கோடி மதிப்பிலான 46 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் பணப் பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், மாதவரம் சட்டமன்ற தொகுதியில் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த வாகனம் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் ஏராளமான தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில் சென்னையில் அமைந்துள்ள பிரபல நகை கடைக்கு சொந்தமான சுமார் ரூ.65 கோடி மதிப்பிலான 46 கிலோ தங்க நகைகள் என்பதும், இவற்றை உருக்கி புதிய நகை செய்வதற்காக நகை பட்டறைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள், தங்க நகைகளை பறிமுதல் செய்து, மாதவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, மாதவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாள் முன்னிலையில், நகைக்கடை ஊழியர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர். எனினும் அதிகளவிலான நகைகள் என்பதால் இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நகைகள் அனைத்தும் உரிய முறையில் கணக்கில் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்திட ஏதுவாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.65 கோடி மதிப்பிலான நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு நகை கடையின் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
