சென்னை: தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிமுக மற்றும் பாஜவுக்கு இடையே தொகுதிகளை பிரித்து கொள்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து எடப்பாடி பலமுறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகும் இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது. இதனிடையே பாஜகவுக்கு அதிமுக 29 தொகுதிகளை ஒதுக்கி உடன்பாடு எட்டப்படும் என என்.டி.ஏ. வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பட்டியலில் உள்ள 30 தொகுதிகளை கட்டாயம் வழங்க வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிற கூட்டணிக் கட்சிகளுக்கு யார் தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் அதிமுக-பாஜக இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமமுக, த.மா.கா. தவிர்த்து பிற கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை ஒதுக்கீடு செய்வோம் என அதிமுக கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டிடிவி தினகரன், அன்புமணி நாளை டெல்லி செல்கின்றனர். என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
