×

அதிமுக – பாஜ தொகுதி பங்கீடு இழுபறியால் டெல்லிக்கு அழைப்பு அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு

* மிரட்டி தொகுதி பங்கீட்டுக்கு பணியவைத்தார்
* நயினார், அன்புமணி, டிடிவி.தினகரனும் டெல்லிக்கு இன்று அழைப்பு
* நேர்மையான தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற முடிவு

சென்னை: அதிமுக – பாஜ இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த அமித்ஷா, உடனடியாக டெல்லி வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னையில் இருந்து நேற்று எடப்பாடி அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்று அமித்ஷாவை சந்தித்தார். அவரை, மிரட்டி பணிய வைத்து அதிக தொகுதிகளை பெறுவது உறுதியாகியுள்ளது. மேலும், அன்புமணி, டிடிவி.தினகரன் மற்றும் நயினாரையும் அழைத்துள்ளதால் இன்று டெல்லி சென்று பஞ்சாயத்து செய்கின்றனர். இதுதவிர, நேர்மையான தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் கூண்டோடு மாற்றவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிமுக மற்றும் பாஜவுக்கு இடையே தொகுதிகளை பிரித்து கொள்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து எடப்பாடி பலமுறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகும் இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது.

குறிப்பாக, அதிமுகவுக்கு சாதகமான வேளச்சேரி, தி.நகர் உள்பட தமிழகத்தில் 55 தொகுதிகளை பாஜ கேட்பதாகவும், அவற்றை பிரித்து தருவதில் அதிமுகவுக்கு தயக்கம் இருப்பதால், இருதரப்பினருக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல்கள் நிலவுதால் நாட்கள் கடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக – பாஜ கூட்டணி ஏற்பட்டால்தான், மற்ற கூட்டணி கட்சிகளான பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி கொடுக்கும் நிலையில் எடப்பாடி உள்ளார். இதைத்தொடர்ந்து தொகுதிகளை பிரித்து கொள்வதில் உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக, டெல்லியில் இருந்து இன்று தமிழ்நாட்டின் பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ்கோயல் சென்னைக்கு வரத் திட்டமிட்டு இருந்தார்.

எனினும், தொகுதி பங்கீடு குறித்து பியூஸ்கோயல் வந்து பேசினாலும், அதிமுக தரப்பில் வரும் தேர்தலில் பாஜவுக்கு 25 தொகுதிகள்தான் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. சமீபத்தில் பிரதமர் மோடி திருச்சி வந்தபோது, எடப்பாடி பழனிசாமியை, ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை பார்த்த பியூஸ்கோயல், இனிமேல் அவருடன் பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். நீங்களே பேசுங்கள் என்று அமித்ஷாவிடம் தெரிவித்துவிட்டார். நேற்று சென்னைக்கு வரும் திட்டத்தையும் அவர் ரத்து செய்து விட்டார்.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக டெல்லிக்கு வரும்படி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, சென்னையில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றார். நேற்று மதியம் 1.30 மணிக்கு எடப்பாடி டெல்லி போய் சேர்ந்தார். ஆனாலும் உடனடியாக அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை. இரவு 10 மணி வரை எடப்பாடிக்கு அனுமதி கிடைக்கவில்லை. காத்துக்கிடந்தார். கடைசியில், நேற்றிரவு 10.30 மணியளவில் தான் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது எடப்பாடியை அமித்ஷா நேரடியாக மிரட்டி பணிய வைத்து, அதிக தொகுதிகளை பாஜவுக்கு தர வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் செல்வாக்கான தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், வைத்திலிங்கம் ஆகியோரை வெளியே அனுப்பி விட்டீர்கள். சசிகலாவையும் சேர்க்கவில்லை. தேமுதிக கூட்டணிக்கு ஒப்பந்தம் போட்டு முடிக்கும் தருவாயில் கோட்டை விட்டீர்கள். இதனால் என்டிஏ கூட்டணி இன்று பலம் இழந்துள்ளது. தவெகவுக்கு 90 சீட், ஒரு துணை முதல்வர், 2 அமைச்சர் பதவியை ஒதுக்கியிருக்கலாம். ஆனால் 30க்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக இருந்துவிட்டீர்கள். இனி எப்படி பலம் பொருந்திய திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியை கேட்டுள்ளார்.

மேலும், ஒன்றிய உளவுத்துறை கொடுத்த அறிக்கையை எடப்பாடி பழனிசாமி முன்பு தூக்கிப் போட்டு கேள்விகளை கேட்டுள்ளார். இதற்கு எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் தனக்கு அதிகம் கூட்டம் கூடுவதாகவும், வெற்றி பெறுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதை அமித்ஷா ஏற்கவில்லை. பாஜவுக்கு 35 தொகுதிக்கு குறைவாக வாங்க முடியாது. அதோடு பாமகவுக்கு 23 சீட், டிடிவிக்கு 10 சீட், கிருஷ்ணசாமிக்கு 3, மற்றும் சிறிய கட்சிகளுக்கு தலா ஒன்று என சீட்டுகளை ஒதுக்க வேண்டும். நாளை (இன்று) நயினார் நாகேந்திரன், டிடிவி.தினகரன், அன்புமணி ஆகியோர் டெல்லி வருவார்கள். அப்போது அவர்களோடு மீண்டும் அமர்ந்து தொகுதிகளை ஒதுக்கி, டெல்லியிலேயே பஞ்சாயத்தை முடித்துக்கொள்ளோம் என்று உத்தரவாக கூறியுள்ளார். ஒருவழியாக இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிதான், கூட்டணிக்கு தலைவர் என்று கூறிவந்தாலும், கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பது, தொகுதிகளை ஒதுக்குவது என்று எல்லாவற்றையும் அமித்ஷாவே முடிவுகளை எடுப்பது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் என முக்கிய பதவிகளில் நேர்மை மற்றும் திறமையானவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். இவர்கள் மூலம் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது.

குற்றவாளிகள் விரட்டப்பட்டனர். குற்றங்கள் குறைந்தன. முதல்வர் அறிவித்த திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்றடைய காரணமாக இருந்தனர். இதனால் தமிழகத்தில் நிர்வாகத்தை சீர்குலைக்கவும், அதிகாரிகளிடம் ஒரு பயத்தை உருவாக்கவும் திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று ஒரு பட்டியலை அமித்ஷாவிடம் வழங்கியுள்ளார். இதனால், தமிழகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் சட்டம் ஒழுங்கில் நேரடியாக சம்பந்தப்படாத உளவுத்துறை டிஜிபி பாலநாகதேவி, ஐஜி செந்தில்வேலன், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் ஆகியோரை மாற்றவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உயர் அதிகாரிகளை மாற்றினாலும், தேர்தல் அமைதியாக நடைபெற ஏற்கனவே அதிகாரிகள் திட்டம் வகுத்து, அதற்கான பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளதால், தேர்தல் நடைபெறும் ஒரு மாதத்தில் புதிய அதிகாரிகளால் எதுவும் செய்துவிட முடியாது என்கின்றனர் போலீசார். ஆனாலும் தேர்தல் நேரத்தில் மேற்குவங்கத்தை போன்று ஒரு பதற்றத்தை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதால், அமித்ஷாவிடம் பட்டியலை கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

* அதிமுகவை அடகுவைக்கும் எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது கூட்டணி கட்சிகளை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து பேசுவார். பின்னர் கட்சி அலுவலகத்திலேயே இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆனார். எடப்பாடி முதல்வராகவும் இருந்தார். அப்போது நடந்த தேர்தலின்போது பாஜ, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அப்போதே அதிமுக முன்னணி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சி தலைமை அலுவலகத்தில் பேசாமல், நட்சத்திர ஓட்டலில் பேசுவதா என்று கேள்வி எழுப்பினர். ஆனால், தற்போது எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.

இப்போது, பாஜவுடன் கூட்டணி அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கிறது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு எடப்பாடிதான் தலைமை என்று கூறப்பட்டாலும், எடப்பாடியை அமித்ஷா தான் இயக்கி வருகிறார். கூட்டணி குறித்து பேச ஒவ்வொரு முறையும் எடப்பாடி தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அனைத்து தலைவர்களும் அவர்களை தேடி சென்னை வந்த நிலை மாறி, தற்போது எடப்பாடி மற்ற தலைவர்களை தேடி டெல்லி சென்று காத்துக்கிடப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி பாஜவிடம் அடகுவைத்துவிட்டதாக வெளிப்படையாக அவரது கட்சி தலைவர்கள், தொண்டர்களே பேசும்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : AIADMK ,BJP ,Delhi ,Amit Shah ,Edappadi ,Nayinar ,Anbumani ,TTV.Dhinakaran ,Tamil Nadu ,IAS ,Chennai ,
× RELATED தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும்...