வாஷிங்டன்: அமெரிக்காவின் உயர்மட்ட அமைச்சர்கள் வசிக்கும் ராணுவ குடியிருப்பு பகுதிக்கு மேல் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள போர்ட் மெக்நாயர் என்ற ராணுவ தளம் உள்ளது. இங்கு, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் அமைந்துள்ளன. இந்த அமைச்சர்களின் வீடுகளுக்கு மேல் ஒரே இரவில் பல ட்ரோன்கள் பறந்தது. உடனே பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவற்றை சுட்டு வீழ்த்த முயன்றனர். ஆனால் அதற்குள் மாயமானது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மார்கோ ரூபியோ, பீட் ஹெக்செத் ஆகியோரை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்தனர். இருப்பினும், அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். இந்நிலையில், நியூ ஜெர்சியில் உள்ள ஜாயிண்ட் பேஸ் மெக்குயர்-டிக்ஸ்-லேக்ஹர்ஸ்ட் மற்றும் புளோரிடாவில் உள்ள மேக்டில் விமானப்படை தளம் ஆகியவற்றில் பாதுகாப்பு நிலை ‘சார்லி’ என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, இத்தகைய ட்ரோன் அச்சுறுத்தல்களை ஈரான் விடுத்திருக்கலாம் என பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன, யாரால் இயக்கப்படுகின்றன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
ஒரே இரவில் 9 நாடுகள் மீது ஈரான் தாக்குதல்; டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த 19 நாள்களில் 500க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2,000 ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது உலகின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கத்தாரில் உள்ள எல்பிஜி மீது பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை. கத்தார் மீது ஈரான் புதிய தாக்குதல்களை தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும். கத்தாரின் எல்பிஜி ஆலை மீண்டும் குறிவைக்கப்பட்டால், அவ்வாறு செய்ய தயங்க மாட்டேன்’ என்றார்.
