×

பெண்கள் குறித்து இழிவான பேச்சு; அதிமுக மாஜி அமைச்சர்கள் உருவப்பொம்மைகள் எரிப்பு

திண்டுக்கல்: பெண்களை பற்றி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உருவப்பொம்மைகளை திமுக மகளிரணியினர் எரித்து போராட்டம் நடத்தினர். அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திமுகவின் திட்டத்தை குறை கூறுவதற்காக நடிகை நயன்தாராவை குறிப்பிட்டுப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களுக்கு வழங்கப்படும் சேலை குறித்து ஆபாசமாகப் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திண்டுக்கல் மாநகர திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் அணியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் உருவப்பொம்மைகளை எரித்து திமுக மகளிர் அணியினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதேபோல், விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் உருவபொம்மையை எரித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நயன்தாரா வசனத்திலேயே சி.வி.சண்முகத்துக்கு பதிலடி
சி.வி.சண்முகம் எம்பி பேச்சுக்கு, நயன்தாராவே பதிலளிப்பதுபோல் அவர் நடித்த அறம் திரைப்படத்தில் பேசும் வசனத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர். அறம் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கலெக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். அதில், அரசியல்வாதிகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒருகட்டத்தில் மக்களுக்காக தனதுபதவியை தூக்கி எறிந்து அரசியல்வாதிகளை எதிர்த்து போராடினார். அப்போது அவர் பேசிய வசனத்தில், ஜனநாயக நாடுன்னு நம்பி ஓட்டுபோட்ட பாவப்பட்ட மக்களுக்கும், இந்த மக்களுக்கு முன்னாடி இருக்கும் இந்த மாதிரி பாதாள சாக்கடைகளைத்தான் முதலில் மூடணும் என்று பேசி உள்ளார். இது, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Dindigul ,DIMUKA ,SANMUGAM ,DINDUKAL ,Tamil Nadu ,Adimuga ,
× RELATED சர்ச்சையில் சிக்கிய தேர்தல் ஆணையம்:...