×

திமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது நடந்திருக்கிறது: அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க அனைவரும் பாஜவை எதிர்ப்பார்கள்: – மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ

 

​1திமுக கூட்டணியில் உங்களுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்து இருக்கிறார்கள். இது உங்களுக்கு திருப்திகரமான சூழல் நீடிக்கிறதா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைத்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றப்பாதையை தொடர வேண்டும். எனவே தமிழ்நாட்டின் நலனுக்காக எங்களுக்கு கூடுதல் தொகுதி பெற விருப்பம் இருந்தாலும் கூட இந்த இரண்டு தொகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது.

​2 திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இருப்பதனால் நீங்கள் பாஜவை எதிர்க்கிறீர்களா?
நாங்கள் மட்டும் இல்லை. இது இஸ்லாமியர்களுக்கான எதிர்ப்பு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள், நேசிப்பவர்கள் அனைவரும் பாஜவை எதிர்க்கின்றனர். பாஜவிற்கு அரசியலமைப்புச் சட்டம் மீது எந்தவிதமான அக்கறை இல்லை. காந்தியடிகளை நேசிக்காத ஒரு கட்சியாக பாஜ உள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே கலாச்சாரம், ஒரே மொழியை திணிக்கக் கூடிய பாஜ, பன்முகத்தன்மை கலாச்சாரம் நிறைந்த இந்திய நாட்டிற்கு ஒரு விரேதமாக செயல்படுவதால் நாங்கள் எதிர்க்கிறோம், மற்றவர்களும் எதிர்க்கிறார்கள்.

3 இஸ்லாமியர்களுக்கு பாஜ எதிராகவே செயல்படுகிறதா? இஸ்லாமியர்களுக்காக எந்த நன்மையும் பாஜ செய்யவில்லையா?
இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிராக செயல்படக்கூடிய கட்சி தான் பாஜ. தமிழ்நாட்டில் சிறப்பான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை செய்யக்கூடிய அரசு, பல்வேறு திட்டங்கள் மூலம் வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களித்தாவர்களுக்கும் சரி அரசு சேவை தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதை மெய்ப்பித்து காட்டக்கூடியது இந்த ஆட்சி. ஆனால் பாஜக ஆட்சி அதானி, முகேஷ் அம்பானி போன்றவர்களுக்கான கட்சி அவர்களுடைய நலுனுக்காக, பிரதமர் மோடியின் நண்பர்களுக்காக, நாட்டு மக்களின் நலன்களை காவு கொடுக்கக்கூடிய செயல்களை செய்து வருகிறது.

4 விஜயின் அரசியல் வருகை, சிறுபான்மையினர் வாக்குகளை திமுகவுக்கு எதிராக திருப்ப வாய்ப்புள்ளதா?
​இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பதாலேயே சிறுபான்மையினர் வாக்குகள் மாறும் என்றால், எடப்பாடி பழனிசாமியும் தான் இப்தார்நோன்பு நடத்தினார். அதனால் சிறுபான்மையின மக்களுடைய வாக்கு அதிமுகவிற்கு சென்று விடும் என்று கூறமுடியுமா?. இந்த தேர்தலில் பாஜவிற்கு நேரடியாக ஒருமுகம் இருக்கிறது. மறைமுமாக இன்னொரு முகம் இருக்கிறது. அது தான் விஜய். காரணம் முதல் உரையிலேயே ‘பாசிசமா? பாயாசமா?’ என்று கேட்டார். பாசிசம் எவ்வளவு கொடூரமானது. எவ்வளவு பெரிய அநீதிகளை ஏற்படுத்தும் என்று புரிதலே இல்லாத ஒரு அரசியல் வாதி விஜய் என்பதை சிறுபான்மையினர் தெளிவாக உணருவார்கள். இந்த ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு பல நன்மைகள் அடைந்துள்ளனர். ​பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கட்ட பல்வேறு இடையூறுகள் இருந்தது. அந்த நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. முதல்வர் சிறுபான்மைத் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்து அவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். மேலும் விஜய் பாசிசமா, பாயாசமா என்று கூறியதையடுத்து அவர் கொள்கை தெளிவற்றவர் என்பது தெளிவாக தெரிகிறது. சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்வது கட்டமைக்கப்படக்கூடிய பிம்பமே தவிர, எதார்த்தமான உண்மை அல்ல.

Tags : Dimuka ,Islamists ,Baja ,Jawahirullah MLA ,Humanist People's Party ,Dimuka Dhawar Mu. K. Stalin ,Tamil Nadu ,
× RELATED சர்ச்சையில் சிக்கிய தேர்தல் ஆணையம்:...