×

எனக்கு சீட் வேணும்: மல்லுக்கட்டும் காங்கிரஸ் எம்பிக்கள்

கேரளாவில் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது எம்பி பதவியில் இருக்கும் ஒருவருக்கும் சீட் கிடையாது என்று பல மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி அறிவித்தது. சீட் கேட்டு எம்பிக்கள் யாரும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்பட மூத்த தலைவர்கள் கூறினர். ஆனால் அதையெல்லாம் கேட்பதற்கு முன்னாள் மாநிலத் தலைவரும், கண்ணூர் எம்பியுமான சுதாகரன் தயாராக இல்லை. நான் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவது 110 சதவீதம் உறுதி என்று அவர் அடித்துக் கூறினார். எனக்கு கண்ணூரில் வெற்றி வாய்ப்பு இருப்பதால் எந்தக் காரணம் கொண்டும் போட்டியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. கடந்த வருடம் மாநிலத் தலைவராக இருந்த சுதாகரனை திடீரென பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக சன்னி ஜோசப் தலைவராக நியமிக்கப்பட்டார். முதலில் தலைவர் பதவியில் இருந்து விலக அவர் மறுத்தார். அப்போது சட்டப்பேரவை தேர்தலில் சீட் தருவதாக காங்கிரஸ் மேலிடம் சுதாகரனுக்கு உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் சுதாகரன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக சம்மதித்தார் என்றும் தகவல்கள் வெளியாகின.

அப்போது காங்கிரஸ் தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று சுதாகரன் உறுதியாக இருக்கிறார். ஆனால் இவருக்கு சீட் கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சுதாகரனுக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் சுதாகரன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஒருவேளை கட்சியில் இருந்து அவர் விலகிவிடுவாரோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டது. இதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடக் குழு சுதாகரனை டெல்லிக்கு வரவழைத்தது.

கடந்த சில தினங்களாக காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சுதாகரனிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர் எதற்கும் மசியவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு சீட் வேண்டும் என்பதில் சுதாகரன் மிகவும் உறுதியாக இருக்கிறார். இதேபோல ஆற்றிங்கல் தொகுதி எம்பியான அடூர் பிரகாஷும் சீட் கேட்டு முரண்டு பிடித்து வருகிறார். இவருக்காக சில சமுதாயத் தலைவர்களும் களத்தில் குதித்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் மேலிடம் பரிதவித்து வருகிறது. எனவே சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷுக்காக மட்டும் நிபந்தனைகளை தளர்த்தி அவர்களுக்கு சீட் கொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Congress ,Kerala ,Sathison ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்