நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடிகர் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுவது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணி வைப்பது என்பது அவர்களின் உரிமை. இதைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். இதில் நான் கருத்துச் சொல்ல ஏதுமில்லை. பாஜவின் தேர்தல் பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வரவுள்ளார். அவர் வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி இறுதி செய்யப்படும். அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம். தோல்வி பயத்தினால் தொகுதி மாறுவதாக என்னை பற்றி ஓபிஎஸ்சின் மகன் கூறியுள்ளார். இதுகுறித்த விமர்சனங்களுக்கு, நான் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பதில் சொன்னால்தான் சரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
