×

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஒன்றிய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதுதொடர்பான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பற்றி ஆராய பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 39 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை பெற்றுள்ளது.

மேலும், இந்த குழுவினர் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் கூட்டத்தை நடத்தினர். அப்போது சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், முன்னாள் தலைமை நீதிபதிகள் சஞ்சீச் கண்ணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கே.எஸ்.கேஹர் உள்ளிட்டோர் குழுவில் ஆஜராகி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அத்துடன் இந்த விவகாரம் குறித்து குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை 2026 பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்க கோரும் தீர்மானம் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி மக்களவையில் நிறைவேறியது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல்நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி மக்களவையில் நேற்று முன்வைத்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Tags : NEW DELHI ,Union Government ,
× RELATED “எரிசக்தி நிலையங்கள் மீதான...