டிரேப்பர் சிட்டி: அமெரிக்க மாடல் அழகி டெய்லர் பிரான்கி பால் கடந்த 2023ம் ஆண்டு மதுபோதையில் தனது முன்னாள் காதலர் டகோட்டா மோர்டென்சன் மீது இரும்பு நாற்காலிகள் மற்றும் மரத்தாலான விளையாட்டுப் பொருட்களை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த மோதலில் ஒரு நாற்காலி தவறுதலாக அவரது 5 வயது மகள் மீது பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் டெய்லருக்கும், முன்னாள் காதலர் டகோட்டாவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரேப்பர் சிட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெய்லர் தனது மகன் எவர் முன்னிலையில், டகோட்டாவின் கழுத்தை நெரித்ததாகவும், அவரது செயினை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘தி சீக்ரெட் லைவ்ஸ் ஆப் மார்மன் வைவ்ஸ்’ தொடரின் 5வது சீசன் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து டெய்லர் கூறுகையில், ‘தற்போது நான் மிகவும் கடினமான சூழலை சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு நாளையும் கடப்பதே பெரும் சவாலாக உள்ளது.
டகோட்டா உடனான போதை போன்ற உறவு முறையை முறித்துக்கொண்டேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகள் நலத்துறை, டெய்லர் – டகோட்டா ஆகிய இருவரையும் மனநல பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிட்டுள்ளது.
