வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் போர் தீவிரமடைந்தது. இந்த மோதல் இன்றுடன் 19வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக போக்குவரத்து 97 சதவீதம் வரை சரிந்தது. உலக எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தை கொண்டுள்ள இப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ஈரானின் கடற்கரை ஓரம் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏவுகணை தளங்களை அமெரிக்காவின் ‘சென்ட்காம்’ என்ற அமைப்பு இலக்கு வைத்தது. சுமார் 2,267 கிலோ எடை கொண்ட ஜிபியு-72/பி ரக பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகளை பயன்படுத்தி ஈரானின் ஏவுகணை தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சர்வதேச கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை செயலிழக்கச் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது. இந்த போரை ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்து, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஜோ கென்ட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்க அரசு நிர்வாகத்தின் போர் நியாயங்களை எனது மனசாட்சியால் ஏற்க முடியாது என்பதால் பதவி விலகுகிறேன்’ என்று தெரிவித்தார். தற்போது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க ‘நேட்டோ’ நாடுகளின் உதவியை கோரியுள்ள நிலையில், போர் விரிவடையும் என்ற அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள் அதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. ஈரான் தாக்குதலில் இஸ்ரேலின் ரமத் கான் பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருகின்றன.
மொஜ்தாபா கமேனி எங்கே?
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா கமேனி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்த சூழலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படை தளபதி கோலம்ரெசா சுலைமானி ஆகியோரையும் இஸ்ரேல் ராணுவம் வேட்டையாடியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின், ‘மொஜ்தாபா காமேனி பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது; அவரது குரலை நாங்கள் கேட்டதில்லை; அவரை பார்க்கவும் இல்லை.
ஆனால், ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவரை நாங்கள் பின்தொடர்வோம், தேடி கண்டுபிடிப்போம், பின்னர் அவரை அழிப்போம்’ என்று அவர் தெரிவித்தார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு மொஜ்தாபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவோ, டிவியில் உரையாற்றவோ இல்லை. அவர் பாதுகாப்பான ரகசிய இடத்தில் தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை ஒழிப்பதே இஸ்ரேலின் நீண்டகால திட்டம் என உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டடி பட்ட இந்தியருக்கு ஆறுதல்
கடந்த 8ம் தேதி நடந்த ஏவுகணை தாக்குதலின் போது, இஸ்ரேலில் தங்கியிருந்த இந்தியர் ஒருவரது கழுத்தில் ஏவுகணையின் சிதறல்கள் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அவர் டெல் அவிவ் நகரில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நீண்ட நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் நேற்று நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் இந்தியரை சந்தித்து ஆறுதல் கூறினார். இஸ்ரேலில் உள்ள மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினருடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக ெதரிவித்தார்.
