சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுகளுடன் மாறுபட்டு வந்த தங்க விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 வரை குறைந்து ரூ.1,16,560க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் நகை வாங்க திட்டமிட்டு காத்திருந்த பொதுமக்கள் மற்றும் திருமண தேவைகளுக்காக தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளர்வு, அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம், மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமையில் காணப்படும் அசாதாரண மாற்றங்கள் ஆகியவை உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் மற்றும் பணவீக்கம் குறித்த தரவுகள் முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்றியமைத்து, தங்கத்தில் இருந்து பிற முதலீட்டு வாய்ப்புகளுக்கு மாறும் போக்கை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பங்குச் சந்தைகளில் காணப்படும் எழுச்சி மற்றும் நிலையான வருமானம் தரும் முதலீட்டு கருவிகளின் மீதான ஈர்ப்பு அதிகரித்திருப்பதும் தங்கத்தின் தேவை குறைவதற்கு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. சென்னையில் நேற்றைய தினம் (மார்ச்.17) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோ ரூ.4000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச்.18) சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்க்கத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2.75லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
