×

காது வலிக்கான காரணங்களும் தீர்வுகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

காது வலி என்பது குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். தொற்று, ஒவ்வாமை மற்றும் சைனஸ் போன்ற பல காரணங்களால் காது வலி ஏற்படலாம். எனவே, காது வலிக்கான அடிப்படைக் காரணத்தைத் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறார் காது மூக்கு தொண்டை அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ப்ரீத்தி. அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

காதுவலிக்கான பொதுவான காரணங்கள் என்ன?

காது என்பது மூன்று வகையாக பிரிக்கப்படும். அதாவது வெளிக்காது, நடுக்காது, உள்காது. இதில் உள் காது பிரச்னைகள் பெரும்பாலும் வலி இருக்காது. வெளிக்காது மற்றும் நடுக்காதில் ஏற்படும் பிரச்னைகள்தான் வலி தோன்றும். அதில் வெளிக்காது வலிக்கு சில காரணங்கள். நடுக்காது வலிக்கு சில காரணங்கள் இருக்கிறது. அவை. வெளிக்காது பொருத்தவரை, மெழுகு மாதிரியான அழுக்கு காதை முழுமையாக அடைத்துக் கொள்ளும்போது வலி தோன்றும். அல்லது காதில் பூச்சிகளோ, எறும்போ போகும்போது வலி தோன்றலாம். சில சமயங்களில் குழந்தைகள் காதில் மணி, கடலை போன்ற சிறிய பொருளை காதில் போட்டுக் கொள்வார்கள். இதனால் காதில் வலி தோன்றலாம்.

அல்லது காதில் தண்ணீர்ப்பட்டு பூஞ்சைகள் ஏற்படுவதால் வலி ஏற்படலாம். அல்லது சிலருக்கு அவ்வப்போது பட்ஸோ அல்லது வேறு ஏதேனும் பொருளைக் கொண்டு காது குடையும் பழக்கம் இருக்கும். அப்படி அடிக்கடி காது குடைவதனால், காதில் புண்ணோ, வீக்கமோ ஏற்பட்டு வலி ஏற்படலாம். சிலருக்கு காதில் உள்ள முடியின் வேர்காலில் சூடு கொப்பளம் போன்று தோன்றி அதனால் காதில் வலி வரலாம். இவை எல்லாம்தான் வெளிக்காதில் ஏற்படும் வலிக்கான காரணங்கள்.

நடுக்காது வலியைப் பொருத்தவரை, சிலருக்கு காதில் சீழ் வருவதை பார்த்திருப்போம். இதனால் காதில் வலி ஏற்படலாம். இந்த சீழ் ஏற்படுவதில் சிலருக்கு சில நாளில் சரியாகிவிடும். இது அக்யூட் ஓடிடிஸ் மீடியா (accute otitis media). சிலருக்கு நீண்ட நாள் இருக்கும். இது (cronic otitis media) என்று சொல்லப்படும். இதில் அக்யூட் ஓடிடிஸ் மீடியா திடீர் காதுவலி ஏற்படும். அந்த வலி கடுமையாக இருக்கும். இதுதான் திடீரென குழந்தைகள் நடு இரவில் காது வலியால் அழுவது அல்லது தூங்கி எழுந்ததும் அழுவது எல்லாம். இது பொதுவாக ஏற்படும் காதுவலி. இதுவும் நடுக்காதில் பூச்சி போனாலோ அல்லது தண்ணீரால் நீர் கோர்த்துக் கொண்டாலோ வரலாம்.

சைனசைட்டிஸ் போன்ற அறிகுறிகளால் காதில் திடீர் வலி உருவாகுமா…

பொதுவாக காது, மூக்கு, தொண்டை மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இதனால், ஒன்றில் பிரச்னை தோன்றினால், அது மற்றவற்றையும் நிச்சயம் பாதிக்கலாம். சைனசைட்டிஸ் பொருத்தவரை பிரச்னை உள்ள எல்லாருக்குமே காதில் வலி கண்டிப்பாக வரும் என்பதில்லை. ஒரு சிலருக்கு வரலாம். ஒரு சிலருக்கு வராமலும் இருக்கலாம்.  அதாவது, காதுக்கும், மூக்குக்கும் இடையில் உள்ள இணைப்பு குழாயில் அடைப்பு ஏற்பட்டால் காதுவலி ஏற்படலாம். க்ரோனிக் சைனசைட்டிஸ் இருந்தால் காதில் அடைப்பு ஏற்பட்டு அதனால் காதுவலி வரலாம்.

கழுத்தில் நரம்புசிக்குதல் (pinched -nerves) அல்லது வேறு எந்த நரம்பு சேதமும் காதுகளில் வலி உருவாக காரணமாகுமா?

கழுத்து எலும்பு தேய்மானத்தினால் கழுத்து எலும்பு நரம்புகள் பின்னிக் கொள்வதுதான் நரம்புசிக்குதல் பிரச்னையாகும். இப்படி நரம்பு பின்னுதல் ஏற்பட்டால், கண்டிப்பாக காது வலி ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் காதுக்குடைய நரம்புகளும் கழுத்து எலும்பு வழியாகத்தான் வருகிறது. எனவே, கழுத்து எலும்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது காதை பாதிக்கலாம்.

இதனால் காதில் வலியாக வரலாம் அல்லது காதில் ஆரம்பித்து தலைவலியாக வரலாம். அதுபோன்று இந்த நரம்புசிக்குதல் பிரச்னை ஏற்பட்டால், காது வலியுடன் தொடர்பாக கை மரத்துப் போதல், கை விரல்கள் எரிச்சலாக இருப்பது அல்லது கையில் சின்ன பாத்திரங்களைக் கூட தூக்க முடியாத அளவு வலிப்பது, தோள்ப்பட்டையில் பிடிப்பு, கழுத்துவலி இதெல்லாம் ஏற்படலாம்.

அதுபோன்று காதில் பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் சில சமயங்களில் காதுவலி வரலாம். அப்படி வருவதற்கான காரணங்கள் என்று பார்த்தால், நரம்புசிக்குதல் ஒரு காரணம். மற்றொன்று பல்வலி, வாய்ப்புண், தொண்டைப் புண் அல்லது தொண்டையில் புற்றுநோய் இருந்தாலும் காது வலியாக அது அறிகுறிகளை காட்டலாம்.

பொதுவாக மக்கள் புறக்கணிக்கும் ஆரம்ப காது வலி அறிகுறிகள் என்ன?

காது அடைப்பு ஏற்படும் போது சளியினாலோ, பனியினலோ காது அடைத்து இருக்கும் என்று மக்கள் தாங்களாகவே நினைத்துக் கொண்டு மருத்துவரை சந்திக்காமல், தங்களுக்கு தெரிந்த கைவைத்தியங்களை செய்து கொள்வார்கள். உதாரணமாக, காதில் பூச்சிப் போய்விட்டது என்றால் காதில் உப்பு தண்ணீரை விடுவது, எண்ணெய் விடுவது, பூண்டு எண்ணெய்லிட்டு காய்ச்சி அந்த எண்ணெயை விடுவது எல்லாம் செய்வார்கள். இவையெல்லாம் முற்றிலும் தவறான வழிமுறையாகும். காதில் இரண்டு நாட்களுக்கு மேல் வலி குறையவில்லை என்றாலும் அல்லது கடுமையான வலி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது.

மக்கள் உடனடியாக காது மருத்துவரை சந்திக்க வேண்டிய ரெட் ஃபிளாக்(red flag) என்ன..

காதில் நீரோ, சீழோ, சளி மாதிரி வடிந்தாலோ அல்லது காது துவாரத்தைச் சுற்றி அல்லது காது மடலில் கொப்பளம் வந்தாலோ, முகவாதம் மாதிரி ஏற்பட்டு வாய் கோனினாலோ, தலைசுற்றல் ஏற்பட்டாலோ காதைச் சுற்றி எங்கேனும் வீக்கம் இருந்தாலோ அதைப் புறக்கணிக்காமல், உடனடியாக காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதோ சிகிச்சை
பெறுவதோ அவசியமாகும்.

காதை தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன?

காதை தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்றால், இன்றைய சூழலில் முதலில் செய்ய வேண்டியது. காதில் நீண்ட நேரம் ஹெட் ஃபோன் பயன்படுத்துவதை நிறுத்துவதுதான். முக்கியமாக இன்றைய இளம் தலைமுறையினர் இதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அடுத்ததாக, இறைச்சல் நிறைந்த இடங்களில் உதாரணமாக, கல்யாணம், பார்ட்டி கொண்டாட்டங்கள், பொது மேடை நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் ஏற்படும் அதிகப்படியான சத்தங்களிலிருந்து தள்ளி இருக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை காலங்களில் அதிக வெடிச்சத்தம் கொடுக்கும் வெடிகளை வெடிப்பதை தவிர்ப்பது நல்லது. அதுபோன்று சிலர் பெரிய நிறுவனங்களில் அதிகப்படியான மெஷின் சத்தத்தில் வேலை செய்வார்கள். அவர்கள், அதிக சத்தத்தை தடுக்கும் இயர் பட்ஸ் போன்ற கருவிகளை அணிந்து கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நிறுவனங்களே காதை பாதுகாக்கும் வகையில், இயர் பட்ஸ்களை வழங்குகின்றனர். அதை முறையாக அணிந்துகொண்டு பின்னர் பணி செய்வது அவரவர் காதை பாதுகாக்க பெரிதும் உதவும். ஆனால், பலரும் அதை அலட்சியமாக நினைத்து அணிந்து கொள்வதில்லை. அது முற்றிலும் தவறானது. காதை பாதுகாக்க கட்டாயம் இவர்கள் இயர் பட்ஸை அணிந்து கொள்ள வேண்டும்.

அதுபோன்று சிலர் தலைவலிக்குது, கால் வலிக்குது, முட்டி வலிக்குது என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே, மாத்திரைகள் வாங்கி உண்பார்கள், இவையும் நமது காதை பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், சிலர் காதுவலிக்காக பின், ஹேர்பின், பேனா போன்றவற்றை காதுக்குள் விட்டு குடைவார்கள். அப்படி செய்யக் கூடாது. இதுவும் காதில் பிரச்னை ஏற்பட ஒரு காரணமாக அமைந்துவிடும்.

அதுபோன்று, சிலருக்கு விமானத்தில் செல்லும்போது காதுவலி ஏற்படுவதாக கூறுகின்றனர். அதற்கு காரணம், நான் முன்பே சொன்னது போன்று காதுக்கும், மூக்குக்கும் தொடர்பு உண்டு. எனவே, மூக்கில் சளியுடன் பயணிப்பது அல்லது மூக்குத்தண்டு வளைவாக இருந்தால், மேலே பறக்கும்போது மூக்கு அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் சிலருக்கு காதில் வலி ஏற்படலாம். எனவே, பயணிக்கப் போகிறீர்கள் என்றால், முன்பே மருத்துவரை அணுகி சளிக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு சளியை குறைத்துக் கொள்ள வேண்டும். மூக்கு தண்டு வளைவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு பின்னர் போவதுதான் நல்லது.

அதுபோன்று விமானத்தில் இருக்கும்போது வலி தெரியாமல் இருக்க வேண்டும் என்றால், விமானம் மேலே எழும் போதும், தரை இறங்கும்போது, வாயில் எச்சிலை கூட்டி கூட்டி விழுங்கிக் கொண்டே இருக்கலாம் அல்லது சிவிங்கம் வாங்கி வைத்துக் கொண்டு அந்த சமயத்தில் அதை மென்று எச்சிலை கூட்டி விழுங்கலாம். இப்படி வாய்க்கு அசைவு கொடுத்துக் கொண்டே இருந்தால், காதில் அடைப்பு ஏற்படாமல், காது வலியை தடுக்கலாம்.

தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்

Tags :
× RELATED பக்கவாத சிகிச்சை புதிய வழிகாட்டுதல் வெளியீடு!