×

3 கொலை, கட்டப்பஞ்சாயத்து என 30 வழக்கில் தலைமறைவு: பிரபல ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: மாதவரம் ரவுண்டனா அருகே எஸ்.ஐ., காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது அதிரடி

 

சென்னை: மாதவரம் அருகே தொழிலதிபர் குடும்பத்தை கட்டிப்போட்டு ரூ.25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் தனிப்படை போலீசார் மாதவரம் ரவுண்டனா அருகே கைது செய்ய முயன்ற போது, பிரபல ரவுடி தொப்பை கணேஷ், எஸ்ஐ, காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது, தற்பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் ரவுடி தொப்பை கணேஷ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவர் மீது 3 கொலை, கொள்ளை உள்பட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை புழல் மகாவீர் கார்டன் பிரதான தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (50). தொழிலதிபரான இவர், சென்னையில் இருந்து மொத்தமாக மணிப்பூர் மாநிலத்திற்கு கம்பளி, போர்வை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா (45). தொழிலதிபர் விஜயகுமார் மனைவி வசந்தா கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி, தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கும்பல், ஒன்று முகத்தில் முகமூடி அணிந்து வந்து தொழிலதிபர் மனைவி வசந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டுக்குள் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் வசந்தா, அவரது கணவர் விஜயகுமார், அவரது தாய் லட்சுமி, மகள்கள் சினேகா, பவித்ரா ஆகிய 4 பேரையும் மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த ரூ.25 லட்சம் பணம், 15 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தொழிலதிபர் விஜயகுமார் கொடுத்த புகாரின்படி, புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வந்தனர். இதில், வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்த கணேஷ் (எ) டில்லி கணேஷ் (எ) தொப்பை கணேஷ் (35). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் தொப்பை கணேஷை ‘ஏ’ கேட்டகிரி ரவுடி பட்டியலில் சேர்ந்து தேடி வந்தனர். இவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான, ரவுடி தொப்பை கணேஷை தலைமறைவாகவே இருந்து வந்தார். அதைதொடர்ந்து, ரவுடி தொப்பை கணேஷனை பிடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தனிப்படைக்கு ரவுடி தொப்பை கணேஷ், மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள செயல்படாமல் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. அதைதொடர்ந்து திரு.வி.க.நகர் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தொழிற்சாலையில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ரவுடி தொப்பை கணேஷ் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

ஆனால் போலீசார் அவரை தப்பி ஓட வேண்டாம் என்று பின்தொடர்ந்த போது, திடீரென ரவுடி தொப்பை கணேஷ் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி அருகில் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டினார். அப்போது தனிப்படையில் இருந்த எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் காவலர் திணேஷ் ஆகியோர் கையில் இருக்கும் கத்தியை போட்டுவிட்டு ஒழுங்க சரணடைந்துவிடு என்று எச்சரித்தனர். ஆனால் ரவுடி சரணடைய மறுத்து அங்கிருந்து தப்பித்தான், ஒரு கட்டத்தில் எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் காவலர் திணேஷ் ரவுடியை சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால் ரவுடி தொப்பை கணேஷ் கையில் வைத்திருந்த கத்தியால் எஸ்ஐ மற்றும் காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

இதில் எஸ்ஐ, காவலர் ஆகியோர் காயமடைந்தனர். ஒரு கட்டத்தில் தனிப்படை போலீசார் கடைசியாக சரணடைய வேண்டி எச்சரித்தனர். ஆனால் போலீசாரை பார்த்து, அருகில் வந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் வேறு வழியின்றி தனிப்படை போலீசார் தங்களது தற்பாதுகாப்புக்காக முதலில் வானத்தை நோக்கி சுட்டனர். ஆனால் அவர் சரணடையாமல் போலீசாரை நோக்கி கத்தியை வீசி தாக்கினார்.

பின்னர் வேறு வழியின்றி தனிப்படையினர் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியால் ரவுடி தொப்பை கணேஷனை சுட்டனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே தனிப்படையினர் குண்டு காயமடைந்த ரவுடியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ரவுடியை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு இணை ஆணையர் உமா, கொளத்தூர் துணை ஆணையர் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் தடயவில் துறை அதிகாரிகளும் என்கவுன்டர் நடந்த தொழிற்சாலையில் தடயங்களை பதிவு செய்தனர். மேலும், என்கவுன்டர் நடந்த பகுதியில் வெளியாட்கள் யாரும் நுழையாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொழிலதிபரை குடும்பத்துடன் வீட்டில் கட்டிப்போட்டு கத்தி முனையில் கொள்ளையடித்த வழக்கில் ஒன்றரை மாதங்களாக தலைமறைவாக இருந்த ரவுடி தொப்பை கணேஷை போலீசார் என்கவுன்டர் மூலம் கொன்ற சம்பவம் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

* போனில் போலீசாருக்கு பகிரங்க மிரட்டல்

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி தொப்பை கணேஷ், சரியாக படிப்பு வராததால் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். அதன் பிறகு, பிரபல வடசென்னை ரவுடி ராஜேந்திரன் (எ) சேராவின் மகன் கதிரவன் (எ) கதிர் என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். வியாசர்பாடியில் திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ அண்ணன் மகன் சுரேஷ் (எ) சூழ்ச்சி சுரேஷ் தரப்புக்கும், ரவுடி சேராவின் மகன் கதிரவன் தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.

இந்த முன்விரோதத்தால் திமுக பிரமுகரான இடிமுரசு இளங்கோ மற்றும் அவரது மைத்துனர் பழனி, கோட்டைசாமி ஆகியோரை ரவுடி தொப்பை கணேஷ் வெட்டி கொன்றான். அதன் பிறகு சில ஆண்டுகளாக சேரா தரப்பை பிரிந்து, தனியாக ரவுடி தொப்பை கணேஷ் தனக்கென கூட்டாளிகளை வைத்துக்கொண்டு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும், இவர் கூலிப்படைக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு ஆட்களை அனுப்பியும் வந்துள்ளார்.

இவர் மீது 2013ம் ஆண்டு செம்பியம் காவல் நிலையம், 2016ம் ஆண்டு வியாசர்பாடி காவல் நிலையம், திருவள்ளூர் காவல் நிலையம் என மொத்தம் 3 கொலை வழக்களும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி, வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி என மொத்தம் 3 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. சிட்லப்பாக்கம், சேலையூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சங்கர் நகர், தாம்பரம் காவல் நிலையங்களில் மொத்தம் 14 திருட்டு வழக்குகள், சேலையூர் மற்றும் திருவள்ளூர் காவல் நிலையங்களில் மொத்தம் 6 வழிப்பறி வழக்குகள், 5 ஆயுத தடை சட்டம் என மொத்தம் 30 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. என்கவுன்டர் செய்யப்பட்ட தொப்பை கணேஷ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திருமணமாகாத தொப்பை கணேஷூக்கு அம்மா வள்ளி, அப்பா ராஜூ மற்றும் சகோதரன் நிர்மல்குமார் உள்ளனர். நிர்மல் குமார் தற்போது மனைவியுடன் கடலூரில் வசித்து வருகிறார். பெற்றோர் மட்டும் இவருடன் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே தொழிலதிபர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீசார் தொப்பை கணேஷை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். அப்போது போலீசாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ரவுடி தொப்பை கணேஷ் ‘முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள்… பிடிக்கும் ஒரு போலீசாரையாவது நான் கொன்றுவிட்டு தான் சாவேன்’ என்று சவால் விட்டுள்ளார். அதோடு இல்லாமல் போலீசாரை மிகவும் ஆபாசமாக பேசிய தகவலும் வெளியாகி உள்ளது.

Tags : Tobhai Ganesh ,Madhavaram Roundabout ,Chennai ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான...