×

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

சென்னை, மார்ச் 17: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026 அறிவிப்பினைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் தலைமையில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், தலைமையில் ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத் தேர்தல் 2026 தொடர்பான அறிவிக்கை கடந்த 15ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் தொடர்பாக, 16 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்திற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் ஆணையராக சென்னை மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 இதர பாலினத்தவர்கள் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களாக உள்ளனர். 4,079 வாக்குச்சாவடிகளும் மற்றும் 6 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 4,085 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 978 இடங்களில் இவ்வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, காவல் துறை பணியாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட 375 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைத்தல் மற்றும் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். வாக்குச்சாவடி அலுவலர்கள் சுமார் 16,500 எண்ணிக்கையில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறைக்கு பிறகு அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக தேர்தல் பொருள்கள் வழங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசின் அமலாக்கத் துறை போன்ற பல்வேறு துறைகளில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 13,634 எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 6,349 கட்டுப்பாட்டு கருவிகளும் சரிபார்க்கப்பட்டு இருப்பில் உள்ளது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் என்ற வீதம், 48 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று சுழற்சி முறைகளில் இக்குழுவினர் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த பறக்கும் படைகள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று சுழற்சி முறைகளில் இக்குழுவினர் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும். தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 2 வீடியோ கண்காணிப்புக் குழு என்ற வீதம், 32 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சுழற்சி முறைகளில் இக்குழுவினர் பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், கட்சிக் கூட்டங்கள் நிகழ்வுகளை பதிவு செய்யும். தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 16 வீடியோ பார்வையிடும் குழுக்கள், 16 உதவி செலவினப் பார்வையாளர் குழுக்கள், 16 உதவி கணக்கு தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலக ரிப்பன் கட்டிடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலக ரிப்பன் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு படைகளின் பணிகள் கண்காணிக்கப்படும்.
மாவட்டத் தேர்தல் அலுவலக ரிப்பன் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7012 என்ற தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது. பொது மக்கள் இத்தொலைபேசியின் வாயிலாக தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

தேர்தல் தொடர்பான புகார்கள் சி-விஜில் என்ற செயலி உதவியுடன் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு படைகளுக்கு புகார்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு புகார் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து 30.03.2026 முதல் 06.04.2026 வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கலின் போது ரூபாய் 10,000 முன்வைப்புத் தொகையாக செலுத்திட வேண்டும். பட்டியலினத்தவர் இத்தொகையில் 50 விழுக்காடு செலுத்தலாம். வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை செலவிடலாம். மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், பொது மக்கள் ரூ.10,000 மதிப்புக்குள் பொருள்களை கொண்டு செல்லலாம், ரூ.50,000 வரை ரொக்கமாக கொண்டு செல்லலாம், தொகை அதிகமாக இருப்பின் உரிய ஆதரங்களுடன் கொண்டு செல்ல வேண்டும், தேர்தல் செலவினத்திற்காக என்று சந்தேகிக்கும் பட்சத்தில் பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்படும்.

தலைமை அலுவலகத்தில் மேல்முறையீடு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முன்பு உரிய ஆதரங்களை சமர்பிக்கும் பட்சத்தில் இக்குழுவானது அளிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை விடுவிக்கும். தேர்தலுக்காக செலவிடப்படும் செலவினத்தை கணக்கீடு செய்ய விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைப்பட்டியலின் அடிப்படையில் வேட்பாளரின் தேர்தல் செலவீனம் கணக்கிடப்படும். ஒற்றைச்சாளர முறையில் கூட்டங்கள் நடத்துவது, வாகனங்களை பயன்படுத்துவது போன்றவற்றிற்கு உரிய அனுமதியினை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்ற ஆறு வகையான இனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் “Suvidha” என்ற செயலி வாயிலாக அனுமதி பெறும் நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தின் முகவரி https://suvidha.eci.gov.in ஆகும். வேட்பாளர்கள் செயலியின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த இணையத்தின் வாயிலாக அனுமதி பெற, நிகழ்விற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க. நகர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இராணி மேரி கல்லூரியிலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளது, சென்னை மாவட்டத்தில் காவல் துறையினரால் அனுமதி வழங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவற்கு அனுமதி வழங்கப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலினை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Tamil Nadu Assembly General Elections ,Chennai District ,Election Officer ,Chennai Corporation ,Commissioner ,Kumaragurubaran… ,
× RELATED நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு