தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று 200 தொகுதிக்கு மேல் வெல்லும். திமுக கூட்டணியில் தேமுதிக வருகையால் எந்த அதிருப்தியும் இல்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி தொகுதி முடிவு செய்யப்பட்டு தேமுதிக குழு யார் போட்டியிடுவது என்பதை ஆலோசனை செய்யும்.
கடந்த முறை விட இந்த முறை அதிக தொகுதியில் போட்டியிடுவோம். தேமுதிகவில் நான் மற்றும் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகிறார்கள். எண்ணிக்கை மற்றும் தொகுதி முடிவு செய்த பிறகு எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
