×

படை திரளும் பழைய எதிரிகள்: விழி பிதுங்கும் மாஜி அமைச்சர்!: சசிகலா ஆதரவுடன் கோதாவில் குதிக்கும் இன்ஸ்டா பிரபலம்

 

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் கடந்த இரண்டு முறை வெற்றி பெற்றவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார். இவரே இந்த முறையும் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தவாறு பிளான் ஏ முதல் இசட் வரை தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது இன்ட்ரோ பலர் அறிந்ததுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்பு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என ஆர்பி.உதயகுமார் தான் முதன்முதலில் குரல் எழுப்பினார். இது சம்மந்தமாக தீர்மானமும் நிறைவேற்றினார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதும், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் நெருக்கம் காட்டினார்.

தற்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும், அதிமுகவில் முக்கியப்புள்ளியாகவும் மாறி விட்டார். தன்னை அரசியல்ரீதியாக பழி வாங்கிய இவரை, இம்முறை கட்டாயம் தோற்கடிக்க வேண்டுமென சசிகலா தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்… பாஜ கூட்டணியில் சேர்வதற்கு முன்பு வரை டிடிவி.தினகரனும், இம்முறை திருமங்கலம் தொகுதியில் பிரபலமான ஒருவரை நிறுத்தி, ஆர்பி.உதயகுமாரை தோற்கடிக்க திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பிரபலமானவரான ஜீவிதா நாச்சியாரை, இம்முறை போட்டியிட வைக்க தயார் நிலையில் இருந்தார். கடைசி நேரத்தில் காட்சி மாறி, எதிர்பாராத ட்விஸ்ட் ஆக டிடிவி.தினகரன் தேஜ கூட்டணியில் இணைந்தார்.

இதனை விரும்பாமல் அதிர்ச்சியில் இருந்த சசிகலாவை, சென்னையில் சந்தித்து பேசினார் ஜீவிதா நாச்சியார். இதனால் இவரை அமமுகவில் இருந்து அதிரடியாக நீக்கினார் டிடிவி.தினகரன். அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள் போலவே, தன் பங்குக்கும் சசிகலா கட்சியை துவக்கினார். சமீபத்தில் கட்சியின் பெயரையும் அறிமுகம் செய்தார். இக்கட்சியில் இணைந்துள்ள ஜீவிதா நாச்சியாரை, திருமங்கலத்தில் களமிறக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இவர் தொகுதியில் மிகவும் பிரபலம். மேலும், இவர் மூலம் முக்குலத்தோர் வாக்குகளை அதிகளவில் கவரலாம் என திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே, தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் விழாவினை திருமங்கலத்தில் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். தனக்கு எதிராக எடப்பாடி டீமை திருப்பியவர் ஆர்பி.உதயகுமார் என அடிக்கடி ஓபிஎஸ் கூறி வந்தார். இந்த முறை அவரது தொகுதியில் தனது செல்வாக்கை காட்டவே, இணைப்பு விழாவை திருமங்கலத்தில் நடத்தியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை திருமங்கலம் தொகுதியில் ஜெயிப்போமா? மாட்டோமா என கடைசி வரை நீடித்த பரபரப்பில் இறுதியாக வெற்றி பெற்றார் ஆர்பி.உதயகுமார். இம்முறை தொகுதியில் திமுக பலத்துடன் களமிறங்க உள்ளது. கடந்த முறை இத்தொகுதியில் அமமுக கணிசமாக ஓட்டுகள் வாங்கியிருந்தாலும், டிடிவியை கடுமையாக ஒருமையில் விமர்சித்து வந்தவர் ஆர்பி.உதயகுமார். கூட்டணியில் இருந்தாலும், இருவரும் இதுவரை பொதுவெளியில் பேசிக் கொள்ளவில்லை. எனவே, இவரை தட்டி வைக்கவே டிடிவி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இந்த கட்சியில் நீண்ட காலமாக இருந்தவர் என்பதால், ஜீவிதா நாச்சியாருக்கு இவர்கள் ஆதரவாக வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுகுறித்து ஜீவிதா நாச்சியாரிடம் கேட்டபோது, ‘‘தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன். சசிகலா என்ன ஆலோசனை சொல்கிறாரோ அதன்படி பயணிப்பேன்’’ என்றார்.

ஆனால், இவரை களமிறக்கி ஆர்பி.உதயகுமாருக்கு டஃப் பைட் கொடுக்க தயாராகி வருகிறது சசிகலா டீம். இவர்களோடு திமுக, கூட்டணியில் இருக்கும் அமமுக என மும்முனை தாக்குதலை எதிர்கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் ஆர்பி.உதயகுமார் இருக்கிறார். இம்முறை இவர் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முடியாது என கங்கணம் கட்டி, அதிமுகவிலும் ஒரு டீம் எதிரணியாக வேலை செய்கிறதாம்…

Tags : Sasikala ,Former ,AIADMK ,minister ,RP Udayakumar ,Thirumangalam ,Madurai district ,
× RELATED கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு...