×

மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு விடைத்தாளை திருத்த ஆசிரியருக்கு உதவிய 6ம் வகுப்பு மாணவர்கள்: வீடியோ வைரலால் பரபரப்பு; கல்வித்துறை விசாரணை

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்த 6ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியருக்கு உதவி செய்துள்ளனர். இதுதொடர்பாக கல்வி வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சதாராவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள பால்டன் பகுதியில் உத்தரேஷ்வர் உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர், கடந்த இரு தினங்களுக்கு முன் 10ம் வகுப்பு பொதுதேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர், 10ம் வகுப்பு விடைத்தாளை திருத்த ஆசிரியருக்கு உதவியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடனே, இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா மாநில இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியத்தின் கோலாப்பூர் கோட்ட வாரியம் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கோலாப்பூர் கோட் வாரிய தலைவர் ராஜேஷ் ஷிர்சாகர் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், விடைத்தாள்களில் காலியாக இருக்கும் பக்கங்களில் கோடு போடுவதற்கு மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விடைத்தாள்களில் காலியாக உள்ள பக்கங்களில் ஆசிரியர்கள் மட்டுமே கோடுகளை போட வேண்டும். மாணவர்கள் அவ்வாறு செய்ய கூடாது. அங்கீகாரமற்ற நபரிடம் விடைத்தாள்களை கொடுப்பது விதிமீறலாகும். எனவே சம்பவம் பற்றி விசாரிக்க குறிப்பிட்ட பள்ளிக்கு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags : Maharashtra ,Pune ,Satara ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த 2...