புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 28 இந்திய தேசிய கொடியிட்ட கப்பல்களில் 2 கப்பல்கள் கடற்படை பாதுகாப்புடன் நேற்று ஜலசந்தியை கடந்து சென்றது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய், காஸ் சப்ளை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய கொடியுடன் 28 கப்பல்கள் சிக்கியுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதை தொடர்ந்து நேற்று ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த 28 இந்திய தேசிய கொடியிட்ட கப்பல்களில் 2 கப்பல்கள், தற்போது பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஓமனிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ‘ஜக் பிரகாஷ்’என்ற இந்தியக் கொடியிட்ட எண்ணெய் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்குப்பகுதியிலிருந்து கடற்படை பாதுகாப்புடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து எல்பிஜி காஸ் ஏற்றிச் சென்ற ‘ஷிவாலிக்’ (Shivalik) எனும் இந்தியக் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளது. ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வது தொடர்பாக இந்தியாவும் ஈரானும் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 40,000 மெட்ரிக் டன் அளவிலான பிரம்மாண்டமான எல்பிஜி சரக்கை ஏற்றிச் செல்லும் ‘ஷிவாலிக்’ எனும் கப்பல், சுமார் 7 நாட்களில் இந்தியக் கடற்கரையை வந்தடைய உள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே போல் மற்றொரு கப்பலும் அந்த ஜலசந்தியிலிருந்து கடற்படை பாதுகாப்புடன் புறப்பட்டு, விரைவில் இந்தியாவை வந்தடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கும் ஈரான் அதிபர் பெசெஷ்கியானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியக் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. நேற்று ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து புறப்பட்ட ‘ஷிவாலிக்’ கப்பலுக்கு, அதன் பயணத்தின் போது இந்திய கடற்படை பாதுகாப்பு அளித்து வருகிறது.
இந்த முன்னேற்றத்தை ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா உறுதி செய்தார். ஜக் பிரகாஷ் கப்பல் புறப்பட்டது பற்றி அவர் கூறியதாவது:ஈரான் போரால் மொத்தம் 28 இந்தியக் கொடியிட்ட கப்பல்கள் சிக்கிக்கொண்டுள்ளன. அவற்றில் 24 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியிலும், நான்கு கப்பல்கள் கிழக்குப்பகுதியிலும் உள்ளன. கிழக்குப் பகுதியில் சிக்கியிருந்த நான்கு கப்பல்களில் ஒன்றான ‘ஜக் பிரகாஷ்’ தற்போது அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. அக்கப்பல் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இடத்திற்கு எரிபொருளை ஏற்றிச் செல்கிறது.
கப்பல் கண்காணிப்பு இணையதளங்கள் காட்டிய தகவலின்படி, அக்கப்பல் ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்திலிருந்து பெட்ரோலை ஏற்றிக்கொண்டு, தான்சானியாவில் உள்ள டங்கா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது மார்ச் 21 அன்று டங்காவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிழக்குப் பகுதியில் மூன்று கப்பல்கள் தொடர்ந்து சிக்கிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் 76 மாலுமிகள் உள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில், அதாவது பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள 24 இந்தியக் கொடியிட்ட கப்பல்களில் மொத்தம் 668 மாலுமிகள் உள்ளனர்.
பரந்த வளைகுடாப் பகுதி முழுவதும் உள்ள வர்த்தகக் கப்பல்கள், துறைமுகக் கப்பல்கள் மற்றும் கடலோரப் பணிக்குச் செல்லும் கப்பல்கள் எனப் பல்வேறு வகையான கப்பல்களில் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகிறார்கள். இதை தொடர்ந்து கப்பல் உரிமையாளர்களுடனும், இந்தியத் தூதரகங்களுடனும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. அனைத்து இந்தியக் கப்பல்களும், அவற்றில் உள்ள பணியாளர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் 2,425க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளையும், 4,441 மின்னஞ்சல்களையும் கையாண்டுள்ளது.
மேலும், சிக்கித்தவித்த 223க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான உதவிகளையும் அது செய்துள்ளது. கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு வருகிறது. இந்தியா முழுவதும் துறைமுக நடவடிக்கைகள் நிலையானதாக உள்ளன. நாட்டில் பற்றாக்குறையாக உள்ள எல்பிஜியை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்க அனைத்து துறைமுகங்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் கடல்சார் நிலைமையை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ஈரான் மோதலில் தற்போது வரை மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு மாலுமி இன்னும் காணவில்லை.
* காயமடைந்த நான்கு மாலுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.
* ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரான் தூதர்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடம் கிடைக்கும் என்று இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது பதாலி தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ இந்தியா எங்கள் நண்பர். 2 அல்லது மூன்று மணி நேரத்திற்குள் அதை நீங்கள் காண்பீர்கள். இந்தியா மற்றும் ஈரான் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த உறவு நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. எங்களிடம் பொதுவான நலன்கள் உள்ளன, பொதுவான நம்பிக்கை உள்ளது. கடினமான காலகட்டங்களில் ஈரானுக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் பங்கு உறுதியாக இருந்தது. இந்தியாவில் தூதராக, போருக்குப் பிறகு, இந்த சூழ்நிலையில் இந்திய அரசாங்கம் பல்வேறு துறைகளில் எங்களுக்கு உதவியது என்று நான் கூறுகிறேன்’ என்றார்.
