×

திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக பெண் நியமனம்: ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமனம்

சென்னை: திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக ஜெ.வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. 2021ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 2025ம் ஆண்டு திமுகவின் மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினத்துடன் அவர் திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது.

இதுகுறித்து ராஜீவ் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘திமுகவின் உயர் பொறுப்புகளில் ஒன்றான திமுகவின் மாணவர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கி, பணியாற்ற வாய்ப்பளித்த முதல்வர், துணை முதல்வருக்கு என்றென்றும் நன்றி உடையவனாக இருப்பேன். முதல்வரின் முத்தான திட்டங்களை துண்டறிக்கைகள் மூலம் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது, கல்லூரி மாணவர்கள் சந்திப்பு, கட்சி பணியில் மாணவர்களை ஒருங்கிணைத்து செயலாற்றியது என தொடர்ந்து திமுக மாணவர் அணியை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறோம்” என்றும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவர் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ.வீரமணி மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக மாணவர் அணியின் வரலாற்றிலேயே செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையை வீரமணி பெற்றுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், \\\\” திமுக மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளம் பதிவில், ‘‘தமிழ், தமிழர். திராவிடம், மதச்சார்பின்மை, சமூகநீதி என்னும் கொள்கை வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் அரசியல் அரணாக நிற்கும் கழகத்தில் கொள்கை பரப்பு என்னும் மாபெரும் அணியின் இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கிய தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். திசை எங்கும் பரப்புவோம் திராவிட அரசியல்\\\\” என்று தெரிவித்துள்ளார். திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி திடீரென மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி, சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK student wing ,Rajiv Gandhi ,Chennai ,J. Veeramani ,DMK ,wing ,Naam Tamilar Party ,
× RELATED என்டிஏ கூட்டணி பேனரில் நயினார் படம்...