14.3.2026 – சனி
காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு அல்லது சாவித்திரி நோன்பு என்பது பெண்கள் கடைபிடிக்கும் ஒரு முக்கியமான விரதமாகும். இது கணவரின் ஆயுள் நீடிக்கவும், நல்ல தாம்பத்ய வாழ்வு அமையவும் பெண்கள் அனுஷ்டிக்கும் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் ஆரம்பிக்கும் வேளையில் கடைபிடிக்க வேண்டிய நோன்பு காரடையான் நோன்பு. இந்த நோன்பு சத்யவான் சாவித்திரி கதையுடன் தொடர்புடையது. இந்த நாளில் காமாட்சி அம்மன் படம் அல்லது மகாலட்சுமி படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய், பூ, மாலை, ரவிக்கை துண்டு சுற்றி வைக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் (கயிறு) பசுமஞ்சள், பூ இணைத்து அதன் மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருளுமாறு அம்மனை வழிபட்டு, தூப தீபம் நிவேதனம் காட்டி விரதத்தை முடிப்பார்கள். பின்னர் தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் வயதான பெண்களை வணங்கி அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பு. உப்பு அடையும், வெல்ல அடையும் செய்து, ‘உருகாத வெண் ணெயும், ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’ என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்கும் வழக்கமும் உண்டு.
சாவித்திரி தேவி காட்டில் விரதமிருக்கையில் கார் அரிசியில் காராமணிப் பயறு சேர்த்து வெண்ணெய் கலந்து தயாரித்த வெல்ல அடை மற்றும் கார அடைகளை நிவேதனம் செய்ததின் நினைவாக இன்றும் கார அடையும் வெல்ல அடையும் நிவேதனம் செய்யப்படுகிறது. நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி முடிந்ததும், மஞ்சள் சரடை மாங்கல்ய சரடுடன் அணிந்து கணவரை நமஸ்கரிக்க வேண்டும். பின்னர், மாமனார் – மாமியாரை நமஸ்கரித்து கணவருக்கும், மாமனார் மாமியாருக்கும் காரடைகளைப் பிரசாதமாக அளிக்க வேண்டும். வீட்டிலுள்ள மற்ற பெரியோர்களை நமஸ்கரித்தபின் சுமங்கலிப் பெண்கள் காரடை உண்டு நோன்பை முடிக்க வேண்டும். சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டுக்குக் கொடுக்க வேண்டும். இன்று மாலை கௌரி பூஜை செய்து சத்தியவான் சாவித்திரி கதை படித்தால், பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டு. நோன்புச் சரடு கட்டிக் கொள்ள சரியான நேரம் இரவு 10:45 முதல் 11:45 வரை. (சூரியன் மீனத்தில் இரவு 12.24 மணிக்கு பிரவேசிக்கிறார்)
15.3.2026 – ஞாயிறு
விஜயா ஏகாதசி
இன்று விஜய ஏகாதசி. “விஜயா” என்றால் வெற்றி என்று பொருள். இந்த நாளில் விரதம் இருப்பதால் வாழ்க்கையில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். விஜயா ஏகாதசி பற்றி பவிஷ்யோத்தர புராணம் போன்ற புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் கதையுடன் தொடர்புடையது. இலங்கைக்குச் சென்று ராவணன் மீது போரில் வெற்றி பெறு வதற்கு முன், ராமர் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் இதற்கு “விஜயா” (வெற்றி தரும்) என்ற பெயர் ஏற்பட்டது. அதிகாலை எழுந்து நீராடி விட்டு விஷ்ணு பெருமாளை வழிபடுங்கள். அவருடைய கதைகளையும் பாடல் களையும் கேளுங்கள். பாடுங்கள். இன்று முழுவதும் உபவாசம் (அன்னம் தவிர்த்து) இருங்கள். அல்லது பால்,பழம் போன்ற எளிய உணவுகளை உட்கொண்டு விரதம் இருங்கள். இரவு ஜாகரம் இருந்து (விழித்திருந்து) பகவானின் நாமம் ெஜபியுங்கள். மறுநாள் துவாதசி அன்று பூஜை செய்து பாரனையோடு (உணவோடு) விரதம் நிறைவு செய்யுங்கள்.
15.3.2026 – ஞாயிறு
திருவோண விரதம்
இன்று ஏகாதசியோடு திருவோண விரதமும் இருப்பது சிறப்பு. “திருவோணம்” என்பது 27 நட்சத்திரங்களில் திரு என்ற அடை மொழியோடு வரும் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் வரும் நாளில் விரதம் அனுஷ்டிக்கப்படுவது மிகவும் சிறப்பாகும்.
15.3.2026 – ஞாயிறு
சமயபுரம் பூச்சொரிதல் விழா
சமயபுரம் மாரியம்மன் பிரசித்திபெற்ற அம்மன். அங்கு பங்குனியில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடக்கும். 28 நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்கு அம்மன் பச்சைப் பட்டினி விரதம் என்பார்கள். அம்மனுக்கு எந்தவித பிரசாத நிவேதனமும் கிடையாது. வெறும் துள்ளு மாவு, நீர்மோர், இளநீர், பானகம்தான் நிவேதனம். 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும்போது, பூச்சொரிதல் விழா நடைபெறும். அதுவும் வெயில் காலத்தில் அம்மனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்வது எத்தனை விசேஷம்? இதில் முதல் பூக்கூடை ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாதர் சீர் வரிசையாக வரும். பிறகு பக்தர்கள் தட்டுத் தட்டாக, கூடை கூடையாக பூக்களைக் கொண்டு வருவார்கள். இவ்விழாவில் கலந்துகொண்டு அம்மனை வேண்ட, விசேஷ வரங்களைத் தருவாள்.
15.3.2026 – ஞாயிறு
சம்பத் கௌரி விரதம்
அம்பாளுக்கு உகந்த நாட்களை கவுரி விரத நாட்கள் என்பா. அன்று வீட்டில் கலசம் வைத்து அம்பாளை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் இந்த விரதம் வரும். பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், சம்பத் அதாவது செல்வம் பெருகும் என்பதால் இதற்கு சம்பத் கௌரி விரதம் என்று பெயர். தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும். திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் சம்பத் ெகளரி உடனாய நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. காசி அன்னபூரணியையும் சம்பத் ெகளரி என்பார்கள்.
16.3.2026 – திங்கள்
சோம பிரதோஷம்
மற்ற பிரதோஷ விரதத்தைவிட திங்கட்கிழமை வரும் சோம பிரதோஷ விரதம் பல மடங்கு அதிக பலனைத் தரக்கூடியது. அன்று விரதம் இருந்து, மாலையில் சிவாலயம் சென்று, அபிஷேகங்களை தரிசிப்பதும், அபிஷேகத்திற்கு உரிய பூஜை பொருட்களைத் தருவதும், பிராகார வலம் வருவதும், ஈஸ்வரனை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும் மிகச் சிறப்பான பலனைத் தரும். மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசி நேயர்கள் அவசியம் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக கிரக தோஷங்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறலாம்.
17.3.2026 – செவ்வாய்
மாத சிவராத்திரி, தண்டியார் குருபூஜை
தண்டியடிகள் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திருவாரூரில் பிறந்தவர். பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தாலும் அகப்பார்வையால் (மனத்தால்) ஆரூரனை அனுதினமும் இடைவிடாது துதிக்கும் மனம் படைத்தவர். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்ட பத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, திருத்தொண்டுகள் பல செய்து வந்தார். ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் சமணர்களின் இருப்பிடம் பெருகி, குளத்தின் இடம் குறைவடைந்தது. தண்டியடிகள், குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கரையிலே போடும் பணியினை மேற்கொண்டார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு இகழ்ந்தனர். தண்டியடிகள் அதை செவியில் ஏற்காது சிவப்பணியே தவப்பணி என்று செய்வதைக் கண்டு அவரை இகழ்ந்தனர்.
‘‘உனக்கு கண்தான் இல்லை, காதும் இல்லையோ?’’ என்று செவி சுடும் படியான சொற்களைக் கூறினர்.
‘‘நீ இக்காரியம் செய்து அடைந்த பயன் என்ன?” என்று கேட்க,
தண்டியடிகள்;
‘‘இது சிவத்தொண்டு. இதற்குப் பயன் சிவத்தொண்டு மூலம் அடைகின்ற
இன்பம்தான்’’ என்று சொன்னார்.
‘‘சிவத்தொண்டின் பெருமை அறிகின்ற ஆற்றல் உங்களுக்கு இல்லை. இப்பணி அழகைக் காண உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை’’ என்று சொல்ல,
‘‘ஓஹோ நீ கொடுத்து வைத்தாயோ?’’ என்று ஏகடியம் பேசினர்.
‘‘ஆமாம். நான் எப்பொழுதும் என் கண்களால் சிவனுடைய திருவடி களையே காண்கின்றேன்’’ என்று
சொன்னவுடன், அவர்கள் சிரித்து,
‘‘கண்ணில்லாத நீ எப்படி சிவனை காண்பாய்? அதை எப்படி நாங்கள்
நம்புவது?’’ என்று சொல்லிவிட்டு,
‘‘சிவனருளால் உனக்கு கண் பார்வை வரட்டும். அதுவரை வேலை செய்யாதே’’ என்று சொன்னதோடு இவருடைய மண்வெட்டியையும் தட்டுக்களையும் பறித்து எறிந்தனர். தண்டியடிகள் மனம் வருந்தி சிவபெருமான் முன் அழுது முறையிட்டார். அன்று சோழ மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், தண்டியடிகளுக்கு உதவுமாறு உத்தரவிட்டார்.
சோழ மன்னன் அடுத்த நாள்
குளக்கரைக்கு வந்து இருவர் வழக்கையும் விசாரித்தான்.
‘‘அடிகளாரே, நீர் கண் பெற்றதுஉண்மையானால் இவர்கள் இந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள். கண் பார்வை பெற்றதை இவர்களுக்குக் காட்டு வீராக’’ என்று சொல்ல, அடுத்த நிமிடம் தண்டியடிகள் சிவபெருமானை வணங்கி குளத்தில் மூழ்கி எழ, அவருடைய ஒளி வீசும் கண் பார்வையை எல்லோரும் கண்டனர். அதே சமயம், சமணர்களின் கண் பார்வை பறிபோயிற்று. அதோடு அவர்கள் குளக்கரையை விட்டு அகன்றனர். தண்டியடிகள் தம்முடைய திருத்தொண்டினைத் தொடர்ந்து பல காலம் செய்து சிவபதம் அடைந்தார். அவருடைய குருபூஜை தினம் (பங்குனி சதயம்) இன்று. அதோடு இன்று மாத சிவராத்திரி நாள்.
18.3.2026 – புதன் பங்குனி அமாவாசை
இந்த ஆண்டின் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் அமாவாசை தினம். புதன் கிழமை குருவினுடைய பூரட்டாதி நட்சத்திரத்தில் வருகின்ற அமாவாசை. இன்று முன்னோர்களை நினைத்து
நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்.
19.3.2026 – வியாழன்
யுகாதி பண்டிகை
ஆதி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. யுகாதி என்பது ஆண்டின் தொடக்கம் என்ற பொருளில் வரும். பல கோயில்களில் யுகாதி ஆஸ்தானம் என்று சொல்லி பஞ்சாங்க படனம் (பஞ்சாங்கம் படித்தல்) செய்வார்கள். சாந்தரமான முறையில் இன்று சித்திரை தொடக்கம். காலையில் எழுந்து நீராடி தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம்,குலதெய்வங்களை முன்வைத்து போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். செய்த படையலை ஏழை எளியவர்களுக்கு வழங்குதல் வேண்டும். அந்த காலத்தில் யுகாதி தினத்தன்று ஒரு ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படிஇருக்கிறது என்பது கணிக்கப்படும்.
“சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ
சம்பத்கராய ச
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம்’’
யுகாதி பண்டிகையன்று மேலே உள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சடியை ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இன்றிலிருந்து வசந்த நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகிறது. இன்று மன்னார்குடி வைர முடி சேவை தரிசனம் கிடைக்கும்.
