×

சூலூர் அருகே புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக்கொலை

சூலூர்,பிப்.11:சூலூர் அருகே புரோட்டாவுக்கு கூடுதலாக குருமா கேட்ட கூலித்தொழிலாளியை அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் அருகேயுள்ள முத்துக்கவுண்டன் புதூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (37). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 மற்றும் 2  வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு  சூலூர் ரயில் நிலையம் எதிரேயுள்ள  கரிகாலன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் புரோட்டோ வாங்கிய ஆரோக்கியராஜ், கூடுதலாக ஒரு பாக்கெட் குருமா வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த கரிகாலன், அவரது நண்பர் முத்துபாண்டியன், புரோட்டோ மாஸ்டர் கருப்புசாமி ஆகியோர் குருமா அளவாகத்தான் தரமுடியும். கூடுதலாக தரமுடியாது எனக் கூறியதோடு, தகாத வார்த்தைகள் பேசி உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. கரிகாலன், கருப்புசாமி,  முத்துப்பாண்டியன் ஆகியோர் சேர்ந்து ஆரோக்கியராஜை தாக்கி கீழே தள்ளினர். பேச்சு மூச்சின்றி மயங்கி சரிந்த அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

தகவல் அறிந்து வந்த ஆரோக்கியராஜ் உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து  வரவழைத்தனர். மயக்க நிலையில் இருந்த ஆரோக்கியராஜை மருத்துவ பணியாளர்கள் சோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.  இதையடுத்து கார் மூலம் சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களும் ஆரோக்கியராஜ் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடையை சூறையாடியதோடு கடையில் இருந்த முத்துபாண்டியனை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கடை அருகே பதுங்கி இருந்த கருப்புசாமி, கரிகாலன் ஆகியோரை பிடித்தனர்.  காயமடைந்த முத்துபாண்டியனை சிகிச்சைக்ாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலையான ஆரோக்கியராஜின் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார், ஆரோக்கியராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆரோக்கியராஜ் மீதான தாக்குதல் குறித்து கருப்புசாமி, கரிகாலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க முத்துக்கவுண்டன்புதூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையான ஆரோக்கியராஜ் தி.மு.க.வில் முத்துக்கவுண்டன்புதூர் பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

Tags : clergyman ,death ,Sulur ,Prota ,
× RELATED குளத்தில் முதியவர் சடலம் மீட்பு