புதுடெல்லி: சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியதால் வளைகுடா பிராந்தியத்தில் போர் வெடித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பயணிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உட்பட எதிர்க்கட்சி எம்பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பிரியங்கா, டிஆர்.பாலு, அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ‘‘பெயர் நரேந்தர், வேலை, சரண்டர் ஆவது, மோடி ஜி, மோடிஜி, தேவை எல்பிஜி’’ போன்ற கோஷங்களை எழுப்பி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல் காந்தி கூறும்போது,’ காஸ் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார். அதானி வழக்கு, எப்ஸ்டீன் கோப்புகள் உள்ளிட்ட வேறு பல காரணங்களால் அவர் பயத்தில் உள்ளார். மக்களவைக்கு கூட அவரால் வர முடியவில்லை. ஆனால் அவர் மக்களை பீதியடைய வேண்டாம் என கூறுகிறார். நேற்றுமுன்தினம் கூட பிரதமரின் இருக்கை காலியாக இருந்தது. எரிவாயு மற்றும் எரிபொருள் நமக்கு ஒரு பிரச்னையாக இருக்கப் போகிறது.
ஏனெனில் நமது எரிசக்தி பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஒரு குறைபாடுள்ள வெளியுறவுக் கொள்கை இந்த சிக்கலை உருவாக்கியுள்ளது. இப்போது, நாம் செய்ய வேண்டியது தயாராக இருப்பதுதான். உங்களுக்கு சிறிது நேரம் இருக்கிறது. அரசாங்கமும் பிரதமரும் உடனடியாக தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும். இல்லையெனில் கோடிக்கணக்கான மக்கள் பெரும் இழப்பை சந்திப்பார்கள்’என்றார். இதை தொடர்ந்து மக்களவையிலும் இந்த பிரச்னையை ராகுல்காந்தி எழுப்பி பேசினார்.
அவர் கூறுகையில்,’ஒரு சமரசம் காரணமாக, பல்வேறு எண்ணெய் சப்ளையர்களுடனான இந்தியாவின் உறவுகளைத் தீர்மானிக்கும் முடிவு அமெரிக்கா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் உரிமையை அரசாங்கம் பரிமாற்றம் செய்து விட்டது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. உலக எண்ணெய் வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. மேலும் இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், குறிப்பாக நமது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வலி இப்போதுதான் தொடங்கியது. அதனால் உணவகங்கள் மூடப்படுகின்றன, எல்பிஜி பற்றி பரவலான பீதி உள்ளது, தெரு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர், நான் சொன்னது போல், இது ஆரம்பம் மட்டுமே. ஒவ்வொரு நாட்டின் அடித்தளமும் அதன் எரிசக்தி பாதுகாப்புதான். நான் இதை லேசாகச் சொல்லவில்லை, ஆனால் நாம் யாரிடமிருந்து எண்ணெய், எரிவாயு வாங்குகிறோம் என்பதை அமெரிக்கா முடிவு செய்ய நம் நாடு அனுமதிக்கிறது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகிறோமா இல்லையோ, வெவ்வேறு எண்ணெய் சப்ளையர்களுடனான நமது உறவை நாமே இனிமேல் தீர்மானிக்க முடியுமா? அது முடியாது. இந்த உரிமைதான் தற்போது அமெரிக்காவுக்கு பண்டமாற்று செய்யப்பட்டுள்ளது.’ என்று பேசினார். ராகுல் பேசும் போது அவையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வளைகுடா பிரச்னை, சமையல் காஸ் தட்டுப்பாடு பிரச்னை குறித்து பேசுமாறும், திசைதிருப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
* ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்பூரி மகள் ஜார்ஜ் சோரோஸிடம் பணம் வாங்கினார்
ராகுல்காந்தி பேசும் போது,’ ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா நமது நாட்டிற்கு 30 நாள் விலக்கு அளித்ததை அதிபர் டிரம்ப் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். இது ஒரு புதிராக இருந்து வருகிறது, இந்தப் புதிரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இந்தப் புதிரை நான் கண்டுபிடித்துவிட்டேன். புதிர் சமரசம் பற்றியது. நமது நாட்டின் எண்ணெய் அமைச்சர் (ஹர்தீப் பூரி) இங்கு அமர்ந்திருக்கும் ஒரு மனிதர், அவர் எப்ஸ்டீனின் நண்பர் என்று கூறியுள்ளார். அவரது (பூரியின்) மகள் ஜார்ஜ் சோரோஸிடமிருந்து பணம் பெற்றதைக் காட்டும் ஒரு ஆவணம் என்னிடம் உள்ளது’ என்றார்.
