* உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி நிர்வாகம் தகவல்
* நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
புதுடெல்லி: தமிழ்நாடு அரசின் பரிந்துரை அடிப்படையில் புதிய டிஜிபி தேர்வுக்குழு மார்ச் 20ல் கூடுகிறது என்று யுபிஎஸ்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவான பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்புகளை மீறி உள்ளது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பி.வில்சன் ஆகியோர்,’சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தான் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டது. டிஜிபி நியமனம் செய்யும் விவகாரத்தில் சட்ட விதிகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு அரசு தரப்பில் இருந்து யுபிஎஸ்.சி நிர்வாகத்திற்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து யு.பி.எஸ்.சி நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நிரந்த டிஜிபி நியமனம் செய்வது தொடர்பான முன்மொழிவை தமிழ்நாடு அரசு எங்களுக்கு வழங்கி விட்டது. இதையடுத்து வரும் 20ம் தேதி தேர்வு குழு கூட உள்ளது. அப்போது நடத்தப்படும் ஆலோசனைக்கு பிறகு முடிவுகள் மேற்கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன்,’ அப்படி என்றால் அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,’இந்த விவகாரத்தில் மாநில அரசின் வாதங்களை கேட்கும் பட்சத்தில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பான பணிகள் நடந்து வருவது தெளிவாக தெரியவருகிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் யுபிஎஸ்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதேப்போன்று மாநில அரசு முன்மொழிவை வழங்கியுள்ளதை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
