×

மேற்கு வங்க கவர்னராக மாற்றியதால் தமிழகத்தில் இருந்து விடைபெற்றார் ஆர்.என்.ரவி

மீனம்பாக்கம்: மேற்கு வங்க மாநில கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்ட ஆர்.என்.ரவி, தமிழகத்தில் இருந்து விடைபெற்று, நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு கவர்னராக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல், நான்கரை ஆண்டு காலம் பதவி வகித்த ஆர்.என்.ரவி, மேற்குவங்க மாநில கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கவர்னர் பொறுப்பில் இருந்து விடைபெற்ற ஆர்.என்.ரவி, நேற்று காலை 9 மணியளவில் கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, காலை 9.10 மணியளவில் சென்னை பழைய விமான நிலைய கேட் எண் 6-க்கு வந்தார்.

அங்கு தமிழ்நாடு காவல்துறையினர் கவர்னருக்கு அணிவகுப்பு மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மனைவி மற்றும் மகள் ஆகியோருடன், காலை 9.50 மணியளவில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் ஆர்.என்.ரவி, அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு ஆர்.என்.ரவி, டெல்லியில் இருந்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா சென்று, அங்கு புதிய கவர்னராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டிற்கு இன்னும் புதிய கவர்னர் முறைப்படி நியமிக்கப்படவில்லை. தற்போது, கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத், தமிழ்நாட்டுக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தமிழக கவர்னராக பதவியேற்கிறார்.

Tags : R.N. Ravi ,Tamil Nadu ,Governor of West Bengal ,Meenambakkam ,Delhi ,Governor of Tamil Nadu ,
× RELATED தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா...