சேலம்: சேலம் அருகே டெம்போ, பைக் மீது அரசு பஸ் மோதியதில் 2 பெண் குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு அரசு பஸ் நேற்று காலை சென்று அங்கிருந்து காலை 9.30 மணிக்கு சேலத்திற்கு மீண்டும் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் மேட்டூர் பெரியவனவாசி பனங்காடு கிராமத்தை சேர்ந்த அய்யந்துரை (49) ஓட்டி வந்தார். கண்டக்டராக நாமக்கல் சிங்களாந்தபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (46) இருந்தார். பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர். காலை 10.56 மணியளவில் சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் வந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி வலது புறம், எதிர்முனையில் சேலம்-ஈரோடு சாலைக்கு வேகமாக திரும்பி சென்றது.
அந்த நேரத்தில் சென்டர் மீடியனை கடந்து எதிர்சாலையில் சென்ற டெம்போ மற்றும் ஒரு பைக் மீது பஸ் மோதி, எதிர் சர்வீஸ் சாலைக்குள் நுழைந்து பெட்ரோல் பங்க் முன்பு நின்றது. இதில் டெம்போவில் வந்த 10க்கும் மேற்பட்டோரும், பைக்கில் வந்த 2 பேரும் இடிபாட்டில் சிக்கி அலறினர். இதில், டெம்போவில் இருந்த ஒரு கைக்குழந்தை உள்பட 2 பேரும், பைக்கில் வந்த சேலத்தை சேர்ந்த தாய் இருசாயி (39), மகன் மணிகண்டன் (21) என 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்களை படுகாயத்துடன் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அதேபோல், டெம்போவில் வந்தவர்கள், சேலம் நெய்காரப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (60) குடும்பத்தினர் எனத்தெரியவந்தது. செல்வராஜிக்கு மணிகண்டன், விக்னேஷ், பூபாலன், மேகநாதன் ஆகிய 4 மகன்களும், சுதா என்ற மகளும் உள்ளனர். இதில், விக்னேசின் மகளான 11 மாத பெண் குழந்தை ஜீவிகாவிற்கு மொட்டையடித்து காது குத்துவதற்காக ராக்கிப்பட்டியில் உள்ள குலதெய்வம் அய்யனாரப்பன் கோயிலுக்கு டெம்போவில் சென்றுள்ளனர். கடைசி மகனான மேகநாதன், தனது நண்பர் ஒருவரது டெம்போவை எடுத்துக்கொண்டு வந்து, அதில் தந்தை மற்றும் சகோதரர்கள் குடும்பத்தை சேர்ந்த 9 பேரையும், பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி முருகன், அமுதா ஆகியோரையும் ஏற்றி சென்றுள்ளார்.
மேகநாதன் டெம்போவை ஓட்டிச் சென்ற நிலையில், சம்பவ இடத்தில் அரசு பஸ் திடீரென சாலையின் குறுக்கே வந்து மோதியுள்ளது. டெம்போவில் வந்தவர்களில் செல்வராஜ் (60), அவரது பேத்திகள் ஜீவிகா (11 மாதம்), நிவிஷ்கா (5), மருமகள் சத்யா (25) ஆகியோரும், பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் (50), அவரது மனைவி அமுதா (46) ஆகியோரும் பலியாகியுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் மேகநாதனும், தனியார் மருத்துவமனையில் விக்னேஷ் மனைவி கார்த்திகா (22), பூபாலன் மனைவி கரலவாணி (23), அவரது தந்தை ஏழுமலை (55) ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அய்யந்துரையை போலீசார் கைது செய்தனர்.
* விபத்து வீடியோ வைரல்
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் உத்தமசோழபுரத்தில் சாலையின் எதிர்புறத்திற்கு தாறுமாறாக வந்து டெம்போ, டூவீலர் மீது மோதிய காட்சிகள் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
