×

ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்கள் குண்டு வீச்சில் சிக்கி சாவதை விட பட்டினிச் சாவே பயமாக இருக்கு: உருக்கமான வீடியோ வெளியாகி பரபரப்பு

நாகர்கோவில்: ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் காரணமாக, ஈரானில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உணவின்றி, தாயகம் திரும்ப முடியாமல் நடுக்கடலில் தவித்து வருகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள், ஈரான் நாட்டிற்கு மீன்பிடி ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சென்றிருந்தனர். தற்போது அங்கு போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த பல நாட்களாக தங்குவதற்கு இடமின்றியும், போதிய உணவின்றியும் விசைப்படகுகளிலேயே அவர்கள் முடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம். இங்க ஈரான்ல 700 பேர் கிட்ட தமிழக மீனவர்கள் போர்ல சிக்கித் தவிச்சிட்டு இருக்கோம். இங்க என்ன ஆச்சுனு சொன்னா, இந்திய கவர்மெண்ட் எங்களுக்கு என்ன பதில் அப்படின்றது தெரியல. வெடி மாதிரி இங்க வந்து குண்டு விழுந்துட்டு இருக்கு. இதுல நாங்க குண்டு விழுந்து சாவுறோமோ இல்லையோ, ஆனா ஒருவேளை சோறு இல்லாம இங்க இருக்குறவங்க ரொம்பவே இருந்துட்டு இருக்காங்க. ஒரு நாள் ரெண்டு நேரம், ஒரு நேரம்.. இப்போ ஒரு நேரத்துக்கே நாங்க என்ன பண்ணுறதுன்ற நிலைமையில இங்க இருந்துட்டு இருக்கோம்.

முதல்ல இங்க பிரச்னை தொடங்குற நேரத்துல எங்க அரபுமாருகள் ‘எதுவும் நடக்காது பாத்துக்கலாம்’ அப்படின்னு சொன்னாங்க. ஆனா இப்போ அதே அரபி, ஈரானி எல்லாரையும் ‘எப்படியாவது உங்க தாயகத்தை தொடர்பு கொண்டு நீங்க தாயகத்துக்குத் திரும்புங்க’ அப்படின்னு சொல்றாங்க. நாங்க எல்லாரும் என்ன பண்ணப்போறோம், அடுத்தகட்ட நிலைமை என்ன, இங்க சாப்பாட்டுக்கு என்ன வழின்னு தெரியாம ஒவ்வொருத்தரும் இங்க சிக்கித் தவிச்சு ரொம்ப வேதனைப்பட்டுட்டு இருக்கோம். அதுபோக ஹார்முஸ் ஜலசந்தி வழியா இந்தியாவோட ஆயில் கப்பல், கேஸ் கப்பல் எடுக்குறதுக்காக இந்திய நேவி எல்லாமே அங்க இருக்கு. ஆனா இந்த 700 மக்களை எடுக்குறதுக்கு எந்த முயற்சியும் இல்ல. ஆயில் கப்பலுக்கும், கேஸ் கப்பலுக்கும் இந்திய கவர்மெண்ட் பாதுகாப்பு கொடுக்குது, இந்த 700 உயிர்களுக்கு இங்க எந்த பாதுகாப்பும் இல்லை.

நாங்க அடுத்த வேளை இங்க என்ன பண்ணப்போறோம், என்ன சாப்பாடு பண்ணப்போறோம் எதுவுமே எங்களுக்குத் தெரியல. இங்க இருக்குற உயிருக்கும் என்ன பதில்னு எங்களுக்குத் தெரியல. குண்டு மழை ஒரு பக்கம் இருந்தாலும், எங்களை அடுத்த வேளை சாப்பாடு இல்லாம இங்க எத்தனை பேர் சாகப்போறாங்கன்னு தெரியாத நிலைமையில நாங்க இங்க பயமா இருந்துட்டு இருக்கோம். அதனால இந்திய கவர்மெண்ட் எங்களை எவ்வளவு சீக்கிரம் மூவ் பண்ணி எங்களை எடுக்க முடியுமோ, அவ்வளவு தூரம் எங்களுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணி எங்களை எடுக்குமாறு உங்களை கேட்டுக்கிறோம். இவ்வாறு அவர்கள் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

* சிறப்பு விமானங்கள் மூலம் மீட்க வேண்டும்
எங்கள் வீட்டுப் பிள்ளைகள் அங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களைப் பத்திரமாக மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகத் தூதரக ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வருவதால், அங்குள்ள இந்திய மீனவர்களைச் சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் மீட்க வேண்டுமென மீனவ அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nadu ,Iran ,Nagercoil ,Israel ,Tamil Nadu ,Kanyakumari district ,
× RELATED சோதனைக்கு நிற்காமல் சென்ற வேலூர் மேயர் கார் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு