நாமக்கல்: ராசிபுரம் அருகே மல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் கூரியர் நிறுவன வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 3 சாக்கு மூட்டைகளில் 141 பெட்டிகளில் ரூ.47.61 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. இதற்காக காட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் வாகனத்தில் இருந்த பொருட்களும் வித்தியாசமாக இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் ரூ.47.61 கோடி மதிப்பிலான நகைகளுடன் வாகனம் கைப்பற்றப்பட்டு ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த வாகனத்தில் வந்த 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதேபோல், கள்ளக்குறிச்சியில் இருந்து திருக்கோவிலூர் சென்ற காரை திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் பகுதியில் நிறுத்தி தேர்தல் பறக்கும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். காரில் உரிய ஆவணம் இன்றி ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங்கிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் காரில் வந்தவர், ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் பாஜ தலைவர் கிருஷ்ணமூர்த்தி (56) என்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
