×

தூத்துக்குடியில் போலி காப்பீடு தயாரித்து மோசடி செய்த 5 பேர் கைது

தூத்துக்குடி : போலி காப்பீடு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 20.2.2024 அன்று நடந்த சாலை விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பால்பாண்டி என்பவர், தனக்கு இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அந்த காப்பீடு சான்றிதழ் போலியானது என்பதை காப்பீட்டு நிறுவன மேலாளர் ராஜேஷ் கண்டறிந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மணியாச்சி காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புலனாய்வு செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில், தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் சங்கரலிங்கம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த பகவதி பாண்டியன் மகன் தங்கராஜ், நெல்லை மாவட்டம் இத்திகுளத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் தங்கப்பாண்டி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பாலமுருகன், செந்தில்வேல் முருகன் ஆகியோர், 4 சக்கர வாகனங்களின் எண்களைப் பயன்படுத்தி, கணினி மூலம் வாகனத்தின் பெயர், வகை மற்றும் உரிமையாளர் முகவரி ஆகியவற்றை மாற்றி, ‘ஒரிஜினல்’ காப்பீடு பாலிசிகளை போன்றே போலிகளை உருவாக்கி வழங்கியுள்ளனர்.

2020ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி காப்பீடு பாலிசிகளை வழங்கி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து தொடர் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பிஇ படித்துள்ள சங்கரலிங்கம், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tuticorin Thoothukudi Economic Crime Police ,Maniachi Police Station, Tuticudi District ,
× RELATED இயக்குநரை கொன்றது ஏன்? நடிகை பரபரப்பு வாக்குமூலம்