சேலம், மார்ச் 10: சேலம் அடுத்த நெய்காரப்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதையை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் நெய்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘சேலம்-ஈரோடு மார்க்கத்தில் நெய்காரப் பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. அப்பகுதியின் இருபுறமும் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அங்குள்ள 25 குக்கிராமங்களுக்கும் இந்த வழியே பிரதானமாக உள்ளது. இதனிடையே ரயில்வே நிர்வாகம் அந்த பாதையை அடைக்க முயற்சி செய்து வருகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி, ரயில்வே சுரங்க பாதையை அடைக்கும் முடிவை கைவிட வேண்டும்,’’ என்றனர்.
