டெல்லி : டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரை கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த நிலையில், கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பாக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது சட்டத்திற்குப் புறம்பானது. வழக்கின் உண்மைத்தன்மையை முழுமையான விசாரணை மூலம் கண்டறியாமல், வழக்கின் ஆரம்பக்கட்டத்திலேயே அவர்களை விடுவித்தது தவறு. இந்த மதுபானக் கொள்கை வழக்கு நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. இந்த மதுபானக் கொள்கைக்காக ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன,’ என்று கூறினார்.இதைத் தொடர்ந்து, சிபிஐயின் மனு விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
