×

சென்சார் முதல் சிபிஐ வரை… முற்றும் நெருக்கடி.. கரூர் வழக்கில் நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சம்மன்!!

புதுடெல்லி : கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகரும் தவெக தலைவரான விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டுள்ளது. கூட்டணிக்காக தொடர் நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர். தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக கரூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதே நேரம் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்டை பொதுச் செயலாளர் அதவ் அர்ஜூனா, இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

அதன்படி டிசம்பர் மாத இறுதி வாரத்தில் 4 பேரும் டெலியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகினார். அப்போது சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய் கூட்டத்திற்கு தேவையான பணம் எங்கிந்து வருகிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது. நடிகர் விஜய் செலவு செய்கிறாரா? அல்லது கட்சியின் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்கிறாரா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரத்திற்கு தேவையான பணம் தொடர்பாக யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கட்சியின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் விஜயின் அரசியல் ஆலோசகரான திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி தான் பணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.அதன்படி தவெக தலைவரான நடிகர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆஜராக கடந்த ஜனவரி 6ம் தேதி சம்மன் அனுப்பினர். அதன்படி கடந்த ஜனவரி 12ம் தேதி நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்று, சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.

அப்போது சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜயிடம் கரூர் கூட்டத்திற்கு காலதாமதமாக வர யார் ஆலோசனை கொடுத்து வழிநடத்தியது என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு விஜய் எனது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கிய சாமி தான் அனைத்து யோசனைகளும் கொடுத்தார். அவர் கூறியபடிதான் நான் கட்சி கூட்டங்களில் பேசுவது, கலந்த கொள்வது எல்லாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. நீண்ட விசாரணைக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் ஜனவரி 19ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் விஜய் மீண்டும் ஆஜராகினார். அப்போது சிபிஐ அதிகாரிகள் மாநாடு ஏற்பாடுக்கான பணம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பெறப்பட்டதா? அதற்கான ஆதாரங்கள் எங்கே? கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுடன் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் 6 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அடுத்த முறை சமர்ப்பிப்பதாக நடிகர் விஜய் கூறியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நாளை நடத்தும் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இருந்து நாளை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் விஜய் நாளை சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தவெக கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இருப்பதால் அவர், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவாரா அல்லது வேறு ஒரு நாள் ஆஜராக காவல அவகாசம் கேட்பாரா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு பாஜக நேரடியாக சிபிஐ அதிகாரிகள் மூலம் அழுத்தம் அளிக்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vijay ,Karur ,NEW DELHI ,CBI ,Delhi ,
× RELATED வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும்...