×

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்தார்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

 

சென்னை: சென்னை சத்திய மூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கட்சி அலுவலகத்தின் 2வது மாடியில் இந்த கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த பார்வையாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் முகுல்வாஸ்னிக் நேராக விமான நிலையம் செல்ல இருந்தார். இதனால், அவர் லிப்ட்டில் கீழே இறங்கினார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் படிக்கட்டு வழியாக வேக, வேகமாக கீழே இறங்கினார். அப்போது முதல் தளப் படிக்கட்டில் இறங்கி வரும்போது, அவரது கால் நழுவி கீழே விழப்பார்த்தார்.

அவரை உடனடியாக அவருடன் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் காண்டீபன், இளைஞர் அணித் தலைவர் சூரிய பிரகாஷ் ஆகியோர் அவரை தாங்கிப்பிடித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவர் முதல்தளத்தில் இருந்து லிப்ட் வழியாக கீழே அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் நிர்மல்குமார் கிரிஷ் சோடங்கருக்கு சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம் என்று தெரிவித்தார். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை கைத் தாங்கலில் காரில் ஏற்றினர். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காரின் முன்பகுதியில் அமர்ந்தபடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முற்பட்டனர்.

ஆனால், அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டாம். விமான நிலையத்திற்கு செல்லுங்கள் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டு சென்றனர். விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதில் கிரிஷ் சோடங்கர் நலமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார். கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்தது சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Congress ,Girish Chodankar ,Sathyamoorthy Bhavan ,Chennai ,Tamil Nadu Congress party ,Sathyamoorthy ,Bhavan ,
× RELATED மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை...