- இந்தியா
- டிரம்ப்
- எங்களுக்கு
- அமைச்சர்
- வாஷிங்டன்
- அமெரிக்க கருவூ
- ஸ்காட் பெசன்ட்
- ரஷ்யா
- அதிபர் டிரம்ப்
- ஈரான்
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு கீழ்படிவதால்தான், ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கியதாக அமெரிக்க கருவூல அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறி உள்ளார். ஈரான் போருக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது. இதை இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்தியாவுக்கு அனுமதி அளிக்க அமெரிக்கா யார் என கேள்வி கேட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் பாக்ஸ் பிசினஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தியர்கள் எங்கள் உத்தரவுக்கு கீழ்படிந்தார்கள். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு நாங்கள் கேட்ட போது அவர்கள் அதை செய்தார்கள். அதற்கு மாற்றாக அமெரிக்க எண்ணெய்யை அவர்கள் வாங்க ஒப்புக் கொண்டார்கள். அதனால், தற்போது உலகெங்கிலும் உள்ள தற்காலிக எண்ணெய் விநியோக இடைவெளியை குறைப்பதற்காக, 30 நாட்களுக்கு ரஷ்ய எண்ணெய் வாங்க அவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம்.
இது தற்போது கடலில் மிதக்கும் ரஷ்ய கப்பல்களில் உள்ள எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி ரஷ்ய எண்ணெய்க்கான எங்களின் தடையில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார். அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் கூறுகையில், ‘‘இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடாவில் ஏராளமான மில்லியன் பீப்பாய் எண்ணெயுடன் ரஷ்ய கப்பல்கள் நின்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை சீனா வாங்குகிறது.
ஆனால் சீனா அதன் சப்ளையர்களை நன்றாக நடத்துவதில்லை. எனவே நாங்கள் இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களை அழைத்து, ரஷ்ய கப்பல்களில் உள்ள எண்ணெயை வாங்க அனுமதித்துள்ளோம். இது எண்ணெய் சப்ளையில் உள்ள இடைவெளியை குறைத்து கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பையும் கட்டுப்படுத்தும்’’ என்றார்.
* கடலில் மிதக்கும் 3 கோடி பீப்பாய்
இம்மாத நிலவரப்படி, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 2.5 முதல் 3 கோடி பீப்பாய் எண்ணெய் ரஷ்ய கப்பல்களில் இருக்கிறது. இதில் 1.5 கோடி பீப்பாய் எண்ணெய் இந்தியாவுக்கு மிக அருகில் உடனடியாக கொண்டு வரும் நெருக்கத்தில் உள்ளன.
* ‘இது கோழைத்தனம்’: காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்க கருவூல அமைச்சர் பேட்டி அளித்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வெளியிட்ட பதிவில், ‘‘56 அங்குல மார்பு என்று தன்னைத்தாேன அறிவித்துக் கொண்டவர் எவ்வளவு கோழைத்தனம், சமரசம் செய்துள்ளார் என்பதற்கு இதை விட வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
