- டி20 இறுதிப் போட்டி
- அகமதாபாத்
- இந்தியா
- உலக கோப்பை
- T20 உலக கோப்பை
- நியூசிலாந்து
- ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்
- இலங்கை.…
அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று நடக்கும் டி.20 உலககோப்பை பைனலில் 3வது முறையாக வென்று கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. கடும் சவால் அளிக்க நியூசிலாந்து களம் காண்கிறது. 10வது ஐசிசி டி.20 உலககோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டது. 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக், சூப்பர் 8 சுற்று முடிவில், தென்ஆப்ரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் அரையிறுதியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்தும், 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் பைனலுக்குள் நுழைந்தன.
குஜராத் மாநிலம் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும் பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. டி.20 உலககோப்பை வரலாற்றில் எந்த ஒரு அணியும் அடுத்தடுத்து பட்டம் வென்றதில்லை. இந்த முறை அந்த சாதனையை படைக்க இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் சூப்பர் பார்முக்கு திரும்பியுள்ளார். 4 போட்டியில் அவர் 232 ரன் அடித்துள்ளார்.
கேப்டன் சூர்யகுமார் 242, இஷான் கிஷன் 263 ரன் அடித்துள்ளனர். இவர்களை தவிர சிவம்துபே (209), ஹர்திக்பாண்டியா (199), கடைசி நேரத்தில் அதிரடியில் கைகொடுக்கின்றனர். நம்பர்-1 வீரரான அபிஷேக் சர்மா இதுவரை பெரிய அளவில் ஆடாத நிலையில், இன்றைய பைனலில் ரன் குவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் வருண்சக்கரவர்த்தி 13 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார். பும்ரா எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார்.
அவர் 10 விக்கெட் எடுத்திருக்கிறார். 7 போட்டியில் 144 பந்துகளை வீசி 159 ரன் மட்டுமே கொடுத்துள்ளார். ஓவருக்கு சராசரியாக 6.62 ரன்னே விட்டுக்கொடுத்துள்ளார். வேறு யாரிடமும் இந்த எக்கனாமி இல்லை. அர்ஷ்தீப் (9) ஓரளவுக்கு சிறப்பாக பந்து வீசியுள்ளார். இதனால், பைனலில் அர்ஷ்தீப்பிற்கு பதிலாக அனுபவ வீரர் முகமது சிராஜ் களமிறங்க வாய்ப்புள்ளது.
மறுபுறம் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் நியூசிலாந்து வலுவாக உள்ளது. நடப்பு தொடரில் இந்தியாவை வென்ற ஒரே அணியான தென்ஆப்ரிக்காவை அரையிறுதியில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் (286), டிம் சீஃபர்ட் (274) மிரட்டி வருகின்றனர். குறிப்பாக ஆலன், தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 33 பந்தில் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். இவர்களை தவிர டேரில் மிட்செல், பிலிப்ஸ், மார்க் சாப்மேன் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். ரச்சின் ரவீந்திரா பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் பங்களிப்பை வழங்கி வருகிறார்.
பவுலிங்கில் கேப்டன் சான்ட்னர், டாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், கோல் மெக்கோன்சி இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பர். முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்தும், சொந்த மண்ணில் பட்டத்தை தக்க வைத்து 3வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியாவும் களம் இறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
* 4வது முறை பைனலில் இந்தியா!
இந்திய அணி இதற்கு முன் 3 முறை டி.20 உலககோப்பை பைனலில் ஆடியுள்ளது. இதில் 2007, 2024ல் பட்டம் வென்றுள்ளது. 2014ல் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி 2வது முறையாக பைனலில் ஆடவுள்ளது. இதற்கு முன் 2021ல் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. ஐசிசி தொடர்களில் இந்தியா 15வது முறையாக பைனலில் களம் இறங்குகிறது. ஆஸ்திரேலியா 14 முறை பைனலில் ஆடி 2வது இடத்தில் இருக்கிறது.
* உலக கோப்பையில் நியூசிலாந்து ஆதிக்கம்
ஒட்டு மொத்தமாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா டி.20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்றிருந்தாலும், உலககோப்பையில் அந்த அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. இதற்கு முன் 2007, 2016, 2021ம் ஆண்டு என 3 முறை மோதியதில், அனைத்திலும் நியூசிலாந்து அணி தான் வென்றுள்ளது. இந்த வரலாற்றை இந்தியா மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
* பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.27.48 கோடி பரிசு
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.27.48 கோடி வழங்கப்படவுள்ளது. 2வது இடம்பெறும் அணிக்கு ரூ.14.65 கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோற்ற தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்துக்கு ரூ.7.23 கோடியும், 5 முதல் 12வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.3.48 கோடியும், 13 முதல் 20வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.28 கோடியும் வழங்கப்படுகிறது.
* போட்டி நடுவர்கள்
இன்று நடக்கும் பைனலில் கள அம்பயர்களாக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் செயல்படவுள்ளனர். இதில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மிகவும் அனுபவம் வாய்ந்த அம்பயர் ஆவார். கடந்த 2024ம் ஆண்டு பார்படாஸில் நடைபெற்ற டி.20 உலககோப்பை பைனலில் இவரே அம்பயராக செயல்பட்டார். 3வது அம்பயராக தென்ஆப்ரிக்காவின் அல்லாஹுதீன் பலேகர், 4வது அம்பயராக தென்ஆப்ரிக்காவின் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், போட்டி நடுவராக ஜிம்பாப்வேயின் ஆண்டி பைக்ராஃப்ட் செயல்படவுள்ளனர்.
* நியூசிலாந்தை ஜோக்கர்ஸ் என அழைப்பேன்-ஸ்டெய்ன்
தென்ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் ஏபி.டிவில்லியர்ஸின் யூடியூப் சேனலில் பேசிய மாஜி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அளித்த பேட்டியில், “எல்லோரும் தென்ஆப்பிரிக்காவை தோற்கும்போதெல்லாம் “ஜோக்கர்ஸ்’’ என்று அழைக்கிறார்கள். ஆனால் எங்களை விட நியூசிலாந்து அதிக இறுதிப்போட்டிகளில் தோற்றுள்ளது. தவறாக நினைக்க வேண்டாம், நீங்கள் (நியூசிலாந்து) இந்த கோப்பையை வெல்லுங்கள்; இல்லையெனில், நான் உங்களை தான் இனி ஜோக்கர்ஸ் என்று அழைப்பேன். நான் நியூசிலாந்தை விரும்புகிறேன், ஆனால் அவர்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது. அது சாத்தியமற்றது,’’ என்றார்.
* ஓட்டலை மாற்றிய இந்தியா
அகமதாபாத்தில் குறிப்பிட்ட ஓட்டலில் தங்கியிருந்தபோது, இந்திய அணி 2023 ஒருநாள் உலககோப்பை இறுதிப்போட்டி மற்றும் இந்த ஆண்டு சூப்பர் 8 சுற்றில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் அதிர்ஷ்டம் இல்லை என்பதற்காக, தற்போது அந்த ஓட்டலில் தங்குவதை இந்திய அணி நிர்வாகம் மாற்றியுள்ளது. மற்றொரு ஓட்டலில் தங்கியிருந்து இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
* அகமதாபாத் ஸ்டேடியத்தில்…
* அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இதற்கு முன் இந்தியா 10 டி.20 போட்டியில் ஆடி இருக்கிறது. 7ல் வெற்றி, 3ல் தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்து ஆடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்திருக்கிறது.
* ஒட்டுமொத்தமாக இங்கு இதுவரை 14 டி.20 போட்டிகள் நடந்துள்ளது. 8 போட்டியில் முதலில் பேட் செய்த அணியும், 5ல் சேசிங் அணியும் வென்றுள்ளன. நடப்பு தொடரில் தென்ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான் மோதிய போட்டி டையில் முடிந்து, 2வது சூப்பர் ஓவரில் தென்ஆப்ரிக்கா வென்றது.
* நடப்பு உலககோப்பையில் 6 போட்டி நடந்துள்ளது. முதலில் பேட் செய்த அணி 3, சேசிங் அணி 2ல் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.
* கடந்த 2023ல் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 234/4 ரன் எடுத்தது தான், இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும்.
* இங்கு சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தென்ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
* இதுவரை நேருக்கு நேர்…
* டி.20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதற்கு முன் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 18ல் இந்தியா, 11ல் நியூசிலாந்து வென்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 4-1 என முன்னிலை வகிக்கிறது.
* நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கேப்டன் சூர்யகுமார் 13 போட்டியில் ஒரு சதம், 4 அரைசதத்துடன் 526 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
* நியூசிலாந்துக்கு எதிராக கடந்த ஜன.31ம் தேதி திருவனந்தபுரத்தில் மோதிய போட்டியில் இந்தியா 271/5 ரன் எடுத்தது தான் அதிகபட்சமாகும். இதேபோட்டியில் நியூசிலாந்து 225 ரன் எடுத்தது தான் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எடுத்த பெஸ்ட் ஸ்கோர்.
