×

தமிழக செய்தி துறையின் மூலம் ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் தொடக்கம்

சென்னை : தமிழக செய்தித் துறையின் மூலம் ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மொழியின் பெருமைமிகு கவிஞர்களில் முன்னணியில் திகழ்பவர் பாரதியார். சுப்பிரமணிய பாரதியார், தமது இறுதி நாட்களில் (1920-21) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் அருகில் அமைந்துள்ள வீட்டில் வசித்தார்.

மகாகவி பாரதியாரின் சிறப்பை இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு செய்தித் துறையின் மூலம், இறுதி நாட்களில் அவர் வசித்த இல்லத்தை ‘பாரதியார் நினைவு இல்லமாக’ பராமரித்து வருகிறது. அதேபோல எட்டயபுரம் மற்றும் வாரணாசியில் அவர் வாழ்ந்த இல்லங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் பாரதியார் நினைவு இல்லங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்புகள், முக்கிய தலைவர்களுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நூற்றாண்டின் மகத்தான கவிஞர் வாழ்ந்த இல்லங்களைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டுப் பயனடைந்து வருகின்றனர். மேலும், பாரதியார் குறித்த தகவல்களைச் சமூக ஊடகம் வாயிலாக இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செய்தித் துறையின் மூலம் ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் வலைதளப்பக்கம் https://www.instagram.com/bharathiyar_illam?igsh=NTVweHVr Mml0anox தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பாரதியாரின் கவிதைகள், அரிய வரலாற்றுக் குறிப்புகள், காணற்கரிய புகைப்படங்கள், காணொலிகள் தொடர்ந்து பதிவேற்றப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள், இளைஞர்கள், இன்றைய தலைமுறையினர் என அனைத்து தரப்பினரும் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Tags : Tamil Nadu News Department ,Instagram ,Chennai ,Tamil Nadu government ,Bharathiyar ,Subramania ,
× RELATED தஞ்சை அருகே சாலியமங்கலத்தில்...