×

முதல்வர் பிரசாரம் செய்யும் இடம் அருகே காரில் வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது

* தீவிரவாத கும்பலுடன் தொடர்பா?
* உளவுத்துறை போலீசார் விசாரணை
* பேரணாம்பட்டு அருகே பரபரப்பு

குடியாத்தம், பிப்.10: பேரணாம்பட்டு அருகே விபத்துக்குள்ளான காரில் வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகள், வீச்சரிவாள் போன்றவற்றுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற இடத்தின் அருகே நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு- ஆம்பூர் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் தாறுமாறாக ஓடிய ஒரு கார், அவ்வழியாக சென்ற பைக் மற்றும் கார்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது விபத்து ஏற்படுத்திய கார் குடியாத்தம் அடுத்த மத்தூர் கிராமம் அருகே சாலையோரம் நின்றுவிட்டது. இதையடுத்து காருக்குள் போதையில் இருந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். மேலும் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

மேலும் காரை சோதனை செய்தபோது வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகள், உறையுடன் கூடிய வாள், கத்தி, மயக்க ஸ்பிரே, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில பதிவெண்கள் கொண்ட கார் நம்பர் பிளேட்டுகள், காரின் முன்னால் கட்டுவதற்கான பல்வேறு கட்சி கொடிகள், செல்போன்கள், செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான பவர் பேங்க், சிம்கார்டுகள், அளவுகோல் ஆகியன இருந்தது. மேலும் நிருபர் என்று அடையாள அட்டையை வாலிபர் வைத்திருந்தார். அதில் அவரது பெயர் இம்ரான் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வாலிபரை விசாரணைக்காக மேல்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காருடன் அதிலிருந்து பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், உளவுத்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தகவலறிந்த எஸ்பி செல்வகுமார் காவல் நிலையம் சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது அந்த வாலிபர், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த இம்ரான் எனவும், தனியார் யுடியூப் சேனலின் நிருபர் எனவும் கூறினார். இதற்கிடையில் தகவலறிந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் போலீசார், அந்த வாலிபரை பேரணாம்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து பிடிபட்ட வாலிபருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கைதானவர் பெயர் இம்ரான் (38) என்றும் பேரணாம்பட்டு லால்மஜித் தெருவை சேர்ந்தவர் என்றும் இவருக்கு மனைவி ஒரு மகன், 3 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது. பயங்கர ஆயுதங்களுடன் எதற்காக சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 5வது கட்டமாக பிற்பகலில் குடியாத்தம் அடுத்த கந்தனேரி, கே.வி.குப்பம் அருகே சென்றாயன்பள்ளி பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். சென்றாயன் பள்ளியில் பிரசாரத்துக்கு வரும் சில மணி நேரத்துக்கு முன்பு தான் இந்த வாலிபர் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : campaign site ,Chief Minister ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...