×

குடியாத்தம் அருகே பரபரப்பு உதவி கலெக்டர், பெண் துணை பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் சிறைபிடிப்பு பொது இடத்தை அளக்கும் தகராறு

குடியாத்தம், பிப்.10: பொது இடத்தை அளக்கும் தகராறில் பெண் துணை பிடிஓ சிறைபிடிக்கப்பட்டார். அப்போது அவரை மீட்க வந்த உதவி கலெக்டரும் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கல்லப்பாடி ஊராட்சி கணவாய்மோட்டூர் பகுதியில், பொது இடம் தொடர்பாக இருபிரிவினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் துணை பிடிஓ ஜெயந்தி அங்குள்ள சாலை மற்றும் பொது இடம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய கல்லப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே பிரச்னை செய்து வரும் உதயகுமார் என்பவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அங்கு சென்று, சாலை மற்றும் பொது இடத்தை அளக்க வேண்டும் உடனடியாக அளக்க வேண்டும் என கூறி துணை பிடிஓ ஜெயந்தியை சிறைபிடித்தனர். இதையறிந்து அங்கு வந்த ஆர்ஐ செந்தில்குமார், விஏஓ ரமேஷ் ஆகியோரையும் அடுத்தடுத்து சிறைபிடித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், தாசில்தார் வத்சலா, பிடிஓ நந்தகுமார் ஆகியோரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தும், உதவி கலெக்டர் ஜீப்பின் முன்புறம், பின்புறம் படுத்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தையறிந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு எஸ்ஐ வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7 மணியளில் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், தாசில்தார் வத்சலா, ஆர்ஐ செந்தில்குமார், விஏஓ ரமேஷ், பிடிஓ நந்தகுமார், துணை பிடிஓ ஜெயந்தி ஆகியோரை மீட்டனர். இந்நிலையில் உதயகுமார் தரப்பை சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக விஏஓ ரமேஷ் நேற்று பரதராமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதயகுமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : space ,Assistant Collector ,PDO ,deputy ,Gudiyatham ,
× RELATED மனவெளிப் பயணம்