×

நெல்லியாம்பதி பகுதியில் ஊருக்குள் மீண்டும் புகுந்த காட்டு யானை

*ரேஷன் கடையை சூறையாட முயன்றது

பாலக்காடு : நெல்லியாம்பதி பகுதியில் ‘சில்லிக்கொம்பன்’ என்கிற காட்டுயானை ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெல்லியாம்பதி உட்பட அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது.

இதனால் காட்டுயானை, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் ஆகியவை வனத்தைவிட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. அவை வாழை, தென்னை, பாக்கு போன்ற பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்த பகுதியில் `சில்லிக்கொம்பன்’ என்ற காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது. பாடகிரி காவல் நிலையம் சாலையில் நடந்து வந்த காட்டுயானை பாடகிரி ஊருக்குள் புகுந்தது. அங்குள்ள ரேஷன் கடை முன்பு சென்று கடையை சூறையாட முயன்றது.

இதனைப்பார்த்த ஊர் மக்கள் பயந்து வீட்டுக்குள் தஞ்சமடைந்தனர். உடனடியாக அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளித்தனர். இதற்கிடையே காட்டுயானை சிறிது நேரம் சாலையில் நின்றபடி மக்களை பீதியடைய செய்தது.

சில மணி நேரத்திற்கு பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. கடந்த 2 நாட்கள் முன்பு நெல்லியாம்பதி சீதாராம்குன்று, புலியம்பாறை பகுதியில் சாலையோரம் திடீரென குட்டியுடன் நின்ற யானைகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழிமறித்தன.

இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் சில மணி நேரம் நிறுத்தினர். காட்டுயானைகள் சாலையைவிட்டு சென்ற பின் வாகனங்களை இயக்கி சென்றனர். காட்டு யானைகளிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என நெல்லியாம்பதி வனத்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nalliampati ,PALAKKAD ,NELLIAMPATI ,CHILLIKOMPAN ,Kerala State Palakkad district ,Nelliampadi ,
× RELATED வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப்...