×

ஈரான்,லெபனான் மீது இஸ்ரேல் விமான படை குண்டு மழை

ஈரான், லெபனான் நாடுகளின் தலைநகரங்களின் மீது நேற்று இஸ்ரேல் விமான படை சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து திடீரென ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பயங்கர தாக்குதலை நடத்தின. இந்த போரின் முதல் நாளிலேயே ஈரான் நாட்டின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். மேலும் ஈரானின் கடற்படைக்கு சொந்தமான 30 கப்பல்கள் அமெரிக்க ராணுவத்தால் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

அமெரிக்காவின் தவறுதலான தாக்குதலில் மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடம் தகர்க்கப்பட்டு 185 மாணவிகள் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்த மோதல் தற்போது வளைகுடா நாடுகள் முழுவதும் பரவி மிகப்பெரிய போராக மாறி வருகிறது. இஸ்ரேல்- அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் அமைக்க இடம் கொடுத்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில்,மேற்கு ஆசிய போரின் 7ம் நாளான நேற்று ஈரான் தலைநகர் டெஹ்ரான், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கின.

இதில் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளின் கோட்டையான நபட்டியே நகரில் உள்ள கட்டிடங்கள் மீது விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதில் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் சரிந்து விழுந்தன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பலி விவரங்கள் தெரியவில்லை. வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு ஒரு நாளைக்கு முன் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் உடனே நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

அதை தொடர்ந்து பெய்ரூட்டில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். அதன் பிறகு நேற்று காலையில் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின. நேற்று முன்தினம் நிலவரப்படி லெபனானில் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.83 ஆயிரம் பேர் தங்கள் இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

Tags : Israeli Air Force ,Iran, Lebanon ,Iran ,Lebanon ,United ,States ,Israel ,
× RELATED புளூ ஸ்பாரோ ஏவுகணை வீசி கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி? பரபரப்பு தகவல்கள்