×

நாங்கள் சொல்பவர்தான் புதிய உச்ச தலைவர் ஈரானின் 80 சதவீத வான் பாதுகாப்பு அழிப்பு; 60% ஏவுகணை தளங்களும் தரைமட்டம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்:ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் பயங்கர போர் ஏழாவது நாளாக நீடித்து வருவதால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சியில் உள்ளன.கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து திடீரென ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பயங்கர தாக்குதலை நடத்தின. இந்த போரின் முதல் நாளிலேயே ஈரான் நாட்டின் உச்ச தலைவரான கமேனி குறிவைத்து கொல்லப்பட்டார். மேலும் ஈரானின் கடற்படைக்கு சொந்தமான 30 கப்பல்கள் அமெரிக்க ராணுவத்தால் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அமெரிக்காவின் தவறுதலான தாக்குதலில் மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடம் தகர்க்கப்பட்டு மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்த மோதல் தற்போது வளைகுடா நாடுகள் முழுவதும் பரவி இன்று 7வது நாளாக மிகப்பெரிய போராக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று இஸ்ரேல் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் கூறுகையில், ‘ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளில் 80 சதவீதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்களில் 60 சதவீதம் வரை அழிக்கப்பட்டு விட்டது’ என்றார். அதேபோல் அமெரிக்க கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர் வெளியிட்ட அறிக்கையில், ‘வளைகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானின் மிகப்பெரிய ட்ரோன் தாங்கி கப்பல் மீது குண்டு வீசப்பட்டு தற்போது அது தீப்பிடித்து எரிந்து வருகிறது’ என்றார். ஈரானின் வான் எல்லையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஈரானின் பதிலடி தாக்குதல் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றும், இன்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் மீது வீசப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வானிலேயே தடுத்து அழிக்கப்பட்டன. பஹ்ரைன் நாட்டின் மனாமாவில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குவைத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன்கள் மோதியதால் தூதரகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘ஈரான் எங்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது, ஆனால் ஈரானின் அடுத்த தலைவரை நாங்களே தேர்ந்தெடுப்போம்.’ என்று தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஈரானில் 1,000 பேரும், லெபனானில் 50 பேரும், இஸ்ரேலில் 13 பேரும் இதுவரை பலியாகி உள்ளனர். போர் எதிரொலியால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 78.88 டாலராக அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் டவ் ஜோன்ஸ் குறியீடு 1050 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த போரில் ஈரானுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டாலும், அதற்கான அமைதி பேச்சுவார்த்தை சூழல்கள் எட்டப்படவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.

Tags : Iran ,US ,President Trump ,Washington ,Israel ,United States ,
× RELATED ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல்...