பகுதி -2
சென்ற இதழ் தொடர்ச்சி….
அகங்காரம் கொண்ட பெண், தன் கணவனை கொஞ்சமும் மதிக்கவில்லை. பல வகையிலும் கணவனை அவமானப்படுத்தினாள். கண்டபடி திட்ட ஆரம்பித்தாள். “எங்கள் சொத்துக்காகத்தான் நீ என்னை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாய், நான் சொல்கிறபடிதான் கேட்க வேண்டும்’’ என்றெல்லாம் பல நிபந்தனைகளைப் போட்டாள். நாளுக்கு நாள் கொடுமை அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் கணவனால் இந்தப் பெண்ணைச் சமாளிக்க முடியவில்லை.
“பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலுங் கூடி இருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற்
கூறாமற் சந்நியாசம் கொள்’’
– என்ற ஔவையார் பாடலுக்கு ஏற்ப, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
உள்ளூரில் இருந்தால் ஆபத்து என்று கண்காணாத இடத்திற்குச் சென்று, வேறு ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, வாழ ஆரம்பித்தான். இது இப்படி இருக்க, கணவனைத் துரத்தி விட்ட பெண், கொஞ்ச காலத்தில் செல்வாக்கு இழந்து வீட்டை விட்டு வெளியேறினாள். வறுமை அவளை சூழ்ந்தது. ஊர் ஊராகச் சென்று, பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய சூழ் நிலைக்கு வந்தாள். கடைசியாக ஒரு ஊருக்கு வந்தாள். அங்கே, இவள் கணவன் சிவசர்மா மிகுந்த செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் வீடுதான் என்று தெரியாமல் அந்த வீட்டில் பிச்சை கேட்டாள்.
வீட்டுக்காரனான இவள் கணவன் தன் மனைவியை அழைத்து, “யாரோ பசி என்று கேட்கிறார்கள், உணவு கொடு’’ என்று கூறினான். அவள் வெளியே வந்து பார்த்துப் பசியோடு சோர்ந்து தள்ளாடிக் கொண்டிருந்தவளை உள்ளே அழைத்து அமரச் செய்து, உபசரித்தாள். அப்போது, “யாரம்மா நீ? எங்கே இருந்து வருகிறாய்? உனக்கு உறவுகள் இல்லையா?’’ என்று விசாரிக்கும் பொழுது, அவள் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள். இவள் குரலை கேட்ட சிவசர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மனைவியின் குரல் போல் இருக்கிறது. ஆனால், அவள் ஏன் இப்படிப் பிச்சைக்கார நிலைக்கு வரவேண்டும்? அவள்தான் அகம்பாவம் பிடித்த பெரிய பணக்காரி ஆயிற்றே? என்று நினைத்து வெளியே வந்து இவளைப் பார்த்தான்.
தன் மனைவிதான் என்று அவனுக்குப் புரியவில்லை. காரணம், அழகும் பொலிவும் இழந்து வடிவம் மாறி இருந்தாள். ஆனால், இவள் தன்னுடைய கணவனைப் புரிந்து கொண்டாள். தன் ஊரையும் பேரையும் சொன்னாள். இப்பொழுது நன்கு அவளை அறிந்து கொண்ட சிவசர்மா, தன் மனைவியிடம் நடந்ததைக் கூறி, “இவள் என் மனைவி. ஏதோ விதி இந்த நிலைக்கு வந்து விட்டாள்.
இவளை நன்றாகப் பாதுகாப்பாயாக!’’ என்று கூறினான். அவளும் அப்படியே செய்தாள். கொஞ்ச நாட்கள் அவர்களோடு இவளும் இருந்தாள். ஆனால், ஆதியில் அவள் செய்த குற்றங்களும் அகம்பாவப் பேச்சுக்களும், அதனால் தன் கணவன் அவமானப்பட்டதும், வீட்டை விட்டுப் போனதும், தான் இந்த நிலைமைக்கு வந்ததும், திரும்பத் திரும்ப வந்து மனதை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. இப்போதும் அவளுடைய கணவன் அவளை மதிப்போடு நடத்தினாலும், இவளுடைய குற்றமே இவளை தூங்கவிடாமல் செய்தது. மனம் தளர்ந்து போனவள், விரைவில் மரணத்தையும் தழுவினாள்.
நரகலோகத்தில் பல தண்டனைகளையும் அனுபவித்துப் பிறகு கரையான், பூச்சி, வாழ்க்கை என பல பிறவிகள் பிறந்து வாழ்ந்து, இறுதியாக இப்போது பெண் பன்றியாகப் பிறந்தாள்.
“அந்தப் பெண் பன்றி வேறுயாருமில்லை, நான்தான்” என்று இஷ்வாகுவின் மனைவிக்கு தன் பூர்வ வரலாற்றைக் கூறி முடித்தவுடன், அதுவரை குற்றுயிராக பேசிக்கொண்டிருந்த பெண் பன்றியின் உயிர் பிரிந்தது. ஒரு ஜோதி மேலே சென்றது. அவள் பெண் தெய்வ வடிவை எடுத்துக் கொண்டாள். தேவ கணங்கள் அவளை விமானத்தில் ஏற்றிச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.“பற்றித் தொடரும் பாவ புண்ணியமே’’ என்பது பட்டினத்தார் வாக்கு. ஒரு பாவமானது அதன் பலனை எப்படி தொடர்ந்து பல பிறவிகளில் தருகிறது, பாவ அனுபவம் முடிவு பெற்றவுடன் எப்படி அது நற்கதி அடைகிறது என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
செல்வத்தைப் பெறுவது எப்படி?
“ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம்
சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்’’
ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும், தனது காந்தியால் மிகவும் பிரகாசிக் கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதி விரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமானஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.
ஸ்ரீதேவி பாகவதம் 9வது ஸ்கந்தம், 42வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம், நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது. மகாலட்சுமியை நினைத்து விரதம் இருப்பது எத்தனை மகத்தான பலன்களைத் தரும் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மகாலக்ஷ்மி பூஜையின் பலனை ஒரு கதை சொல்கிறது. கிட்டத்தட்ட இந்த கதை வரலட்சுமி விரதத்தின் போது படிக்கக்கூடிய கதை.
எளிமையான கதை.இழந்த செல்வத்தைப் பெற்ற கதைசௌராஷ்டிர தேசத்தில் துவாபர யுகத்தில் பத்ராஷ்ரவன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய மனைவி சுரதி சந்திரிகா. அவனுக்கு சியாமபாலா என்ற பெண் குழந்தையும் இருந்தது. ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி அரசின் சுரதி சந்திரிகாவை சந்திக்க அரண்மனைக்கு வந்தாள். முதலில் காவல்காரன் விடவில்லை. இருந்தாலும் அந்தப் பெண்மணி வற்புறுத்தியதால், “என்ன காரியமாக வந்தாய்?’’ என காவலாளி கேட்டான்.
“உன்னுடைய அரசியைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்ல வந்தேன். இதை நீ அரசியிடம் போய் தெரிவித்து, நான் சந்திக்கும் படியாகச் செய்’’ என்று சொன்னவுடன், அரசியும் உள்ளே அனுப்ப சொல்லி, என்ன விஷயம் என்று கேட்கும் பொழுது, அவள் சொன்னாள்;“ராணி, உன் பிறப்பின் ரகசியத்தைச் சொல்ல வந்தேன். நீ சென்ற பிறவியில் ஒரு வணிகனின் மனைவியாக இருந்தாய்.. அப்பொழுது ஆணவமும் செருக்கும் அதிகமாக இருந்தது. அதனால் செல்வமெல்லாம் அழிந்தது. வறுமையில் தவித்த பொழுது, பரிகாரமாக முறையாக விரதமிருந்து லட்சுமி பூஜை செய்தாய். அதன் பலனாக மிகுந்த செல்வத்தை அடைந்தாய். அதன் பிறகும் அதை விடாமல் அந்த பூஜையைச் செய்து வந்தாய். காலகதி அடைந்தவுடன், அந்தப் பூஜையின் பலனாக இப்பொழுது அரசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
ஆனால், லட்சுமி பூஜை செய்வதை மறந்துவிட்டாய். அதைச் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டவே நான் வந்தேன்’’ என்று சொன்னவுடன், அரசிக்கு அவளுடைய ஆலோசனை பிடிக்கவில்லை. யாரோ தெருவில் போகிற ஒரு பிச்சைக்காரி தனக்கு ஆலோசனை சொல்வதா என்று நினைத்தாள். அகம்பாவம் வந்துவிட்டதால், அவளை அரண்மனையில் இருந்து துரத்திவிட்டாள்.அவள் அழுது கொண்டே செல்வதை, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அரசியின் மகள் சியாமபாலா பார்த்து விசாரித்தாள். நடந்ததைக் கேட்டாள். தன்னுடைய அம்மா இந்த வயதான பாட்டியின் ஆலோசனையைக் கேட்காதது மட்டுமின்றி அவமானப்படுத்தி அடித்து விரட்டியதை நினைத்து மிகுந்த வருத்தமடைந்தாள். அந்த முதியவளை மஹா லஷ்மியாகவே நினைத்து வணங்கி ஆறுதல் கூறினாள்.
“பாட்டி. நீங்கள் சொல்கிற பூஜையை நான் செய்கிறேன். எனக்குச் சொல்லித் தாருங்கள்’’ என்று கேட்க, பாட்டி மகிழ்ச்சியோடு அந்தக் குழந்தைக்கு மகாலட்சுமியின் வைபவத்தைச் சொல்லி, பூஜை முறையைச் சொல்லிக் கொடுத்து விடை பெற்றுச் சென்றாள். இயன்றளவு மகாலட்சுமி பூஜை செய்தாள். தவறாமல் அவள் இந்த பூஜையைச் செய்து வந்ததால், அந்த குடும்பமே நன்றாக இருந்தது. சில ஆண்டுகளில் அவள் மணப்பருவம் அடைந்தவுடன், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டாள். அவள் சென்றவுடன், அவளோடு பூஜையின் பலனும் சென்றுவிட்டது. நாட்டில் வறுமை சூழ்ந்தது. ஒருமுறை தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக அரசன் வந்தான்.
தன்னுடைய நாடு செழிப்பு இல்லாமல் பஞ்சத்தில் இருப்பதை மகளிடம் முறையிட்டான். மகள்,“அப்பா, கவலைப்படாதீர்கள் இதோ பொன்னும் பொருளும் இருக்கிறது. எடுத்துக்கொண்டு செல்லுங்கள்’’ என்று தன்னால் இயன்றளவு செல்வத்தைத் தந்தைக்கு கொடுத்து அனுப்பினாள். மகிழ்ச்சியோடு தன்னுடைய நாட்டுக்கு திரும்பிய மன்னன், அரசியைப் பார்த்து, “உன்னுடைய மகள் கொடுத்து அனுப்பி இருக்கிற செல்வத்தைப் பார்’’ என்று சொன்னவுடன், அரசி ஆவலோடு மூட்டைகளைப் பிரித்தாள்.
மகாலட்சுமி பூஜையை அவமதித்த ராணியின் கைபட்டவுடன், அந்தப் பொன்னும் பொருளும் நிறம் மாறி மதிப்பற்றதாகப் போய்விட்டது. மறுபடியும் நாட்டில் வறுமை சூழ்ந்து கொண்டது. இச்சூழலில் தன்னுடைய மகளைப் பார்த்து வரலாம் என்று அரசனும் அரசியும் ஒரு நாள் மகளின் வீட்டிற்கு வந்தனர். மகளின் செல்வ செழிப்பைப் கண்டனர்.
அதிர்ஷ்டவசமாக இவர்கள் வந்த நாளில் வீடு அலங்கரித்து ஆங்காங்கே கோலம் போட்டு விளக்குகள் ஏற்றி வைத்து, மகள் சியாமபாலா வரலட்சுமி பூஜை செய்து கொண்டிருந்தாள்.
பூஜையை முடித்துவிட்டு பிரசாதத்தைப் பெற்றோர்கள் கையில் தந்த மகள், “அம்மா என்னுடைய செல்வத்திற்குக் காரணம், விடாமல் இந்தப் பூஜையை செய்வதுதான். இந்தப் பூஜையை சொல்லித் தருவதற்காகத்தான் ஒரு வயதான பாட்டி ஒரு நாள் உன்னைச் சந்தித்தார். ஆனால் நீ, அவரை அடித்து விரட்டிவிட்டாய்.
அதனுடைய பலன்தான் இப்படி நீ வறுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நீ உடனே முறையாகச் சென்று மகாலட்சுமி பூஜை செய். செல்வத்தின் தேவதையான மகாலட்சுமியை அவமதித்து விட்டு நீ எப்படிச் செல்வத்தோடு வாழ முடியும்?மகளின் இனிமையான அறிவுரை அரசியின் கண்களைத் திறந்தது.
தான் செய்த தவறு புரிந்தது. நாட்டிற்குத் திரும்பிய ராணி, விடாமல் பயபக்தியோடு லட்சுமி பூஜை செய்தாள். இழந்த செல்வத்தைப் போல் பல மடங்கு பெற்று, செல்வ செழிப்போடு வாழ்ந்தாள் என்று கதை முடிகிறது. நல்லவர்கள் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாமல் கேட்பதும், ஆலோசனை சொல்பவர்களை அவமதிக்காமல் இருப்பதும், செல்வத்தின் தேவதையான மகாலட்சுமியை முறையாக ஆராதிப்பதும், நமக்கு நல்வாழ்வைத் தரும் என்பது இந்தக் கதையின் தத்துவம்!
முனைவர் ஸ்ரீராம்
